சென்னையில் கஞ்சா கடத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட நபரை நீதிமன்றம் விடுவித்துள்ளது. இதற்கு சொல்லப்பட்ட காரணம் சுவாரசியமானது. பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளை அளவிடுவதற்கு காவல் துறையினர் தங்கள் சொந்த உபகரணங்களைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக பழ வியாபாரி ஒருவரின் தராசை வாங்கி பயன்படுத்தியதால் நீதிமன்றம் இந்த அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டு சென்னை எல்.ஜி.என் சாலை – கோபால் தாஸ் சாலை சந்திப்பில் காக்கா குமார் என்பவர் கஞ்சா வைத்திருப்பதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் காவல் துறையினர் அவரை கைது செய்தனர். அப்போது, 1.5 கிலோ மதிப்புள்ள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதில் 50 கிராம் தடயவியல் துறைக்கு அனுப்பப்பட்டது. மீதமிருந்ததை 61 நாள்கள் கழித்து நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர்.
கஞ்சாவை பறிமுதல் செய்த உதவி காவல் ஆய்வாளர் குமார் என்பவர், தங்களிடம் எடை இயந்திரம் இருப்பதாக துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளார். ஆனால், நீதிமன்ற விசாரணையில், பழ வியாபாரி ஒருவரின் தராசை வாங்கி பயன்படுத்தியதை ஒப்புக் கொண்டுள்ளார். இதனால், அரசு தரப்பு சாட்சியங்களில் உள்ள முரண்பாட்டை சுட்டிக்காட்டி இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட அசோக் குமார் என்ற காக்கா குமாரை விடுதலை செய்து உத்தரவிட்டது.
போதைப்பொருள் சட்டத்தின் படி, போதைப்பொருளைப் பறிமுதல் செய்யும்போது காவல்துறையினர் சொந்த தராசு, பரிசோதனை கருவி, ஆதாரங்களை சேகரிப்பதற்கான பேக்கிங் மெட்டிரியல் ஆகியவை வைத்திருக்க வேண்டும்.
இப்படி நடைமுறை குறைபாடுகள் காரணமாக குற்றவாளிகள் விடுவிக்கப்படுவதை தடுக்க காவலர்களுக்கு முறையான பயிற்சி அளிக்க வேண்டும்.
ஏற்கெனவே கஞ்சாவை எலி தின்றதால் எடை குறைந்து குற்றவாளி விடுவிக்கப்பட்ட சம்பவங்களும் உண்டு.