நடிகர் ராஜேஷ் மறைவுக்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் இரங்கல்!

நடிகர் ராஜேஷ் மறைவுக்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் இரங்கல்!
Published on

நடிகர் ராஜேஷ் மறைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி, நயினார் நாகேந்திரன், ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

நடிகர் ராஜேஷ் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். வெளிநாட்டில் இருக்கும் அவரது மகள் திவ்யா சனிக்கிழமை இரவுதான் சென்னை வந்தடைவார் என்று கூறப்படுகிறது. அதனால், நடிகர் ராஜேஷின் இறுதி சடங்கு ஜூன் 1ஆம் தேதி காலை 11 மணிக்கு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரின் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ரவி, நயினார் நாகேந்திரன், கமல்ஹாசன் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

mkstalin
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தமிழ்த் திரையுலக மூத்த நடிகர் ராஜேஷ் மறைந்த செய்தியறிந்து மிகவும் வருத்தமடைந்தேன். 40 ஆண்டுகளுக்கும் மேலாக சுமார் 150 திரைப்படங்கள் மற்றும் பல சின்னத்திரைத் தொடர்களில் நடித்ததோடு, பின்னணிக் குரல் கலைஞராகவும் முத்திரை பதித்தவர் ராஜேஷ். முத்தமிழறிஞர் கலைஞர் மீது அளவற்ற மரியாதையும், அன்பும் கொண்டு விளங்கினார். கலைஞரும், ராஜேஷின் திருமணம் முதலிய அவரது இல்ல நிகழ்ச்சிகளில் தவறாது கலந்துகொண்டு வாழ்த்துவது வழக்கம்.

கலைஞர் மறைவுற்றபோது, "தமிழ்நாட்டிலுள்ள அனைத்துக் குடும்பங்களிலும் அவர் ஓர் அங்கம்" என நெகிழ்ச்சியோடு பேசி தனது இரங்கலைத் தெரிவித்தவர் ராஜேஷ் என்பதை இந்த நேரத்தில் நினைத்துப் பார்க்கிறேன். திரைத்துறையில் அவரது நீண்ட அனுபவத்தைக் கருத்தில்கொண்டு, கடந்த 2022-ம் ஆண்டு தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனத்தின் தலைவராக அவரை நியமித்தோம் என்பது குறிப்பிடத்தக்கது.

அவரது மறைவினால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், திரைத்துறை நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆளுநர் ஆர்.என். ரவி

ஆளுநர் ஆர். என். ரவி
ஆளுநர் ஆர். என். ரவி

மூத்த தமிழ் நடிகர் ராஜேஷ் அவர்களின் மறைவால் ஆழ்ந்த வருத்தம் அடைந்தேன். அவரது குறிப்பிடத்தக்க பன்முகத்தன்மை மற்றும் இருப்பு, பல தசாப்தங்களாக தமிழ் சினிமாவை வளப்படுத்தியது. அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் எண்ணற்ற ரசிகர்களுக்கு எனது நெஞ்சார்ந்த இரங்கல்கள்.

நயினார் நாகேந்திரன்

நயினார் நாகேந்திரன்
நயினார் நாகேந்திரன்

தமிழ், மலையாளம் உட்பட பல மொழிகளில் 150-க்கும் மேலான படங்களில் நடித்து, கிட்டதட்ட 40 ஆண்டுகளுக்கும் மேலாக திரையுலகில் வெற்றிகரமாக பயணித்த நடிகர் ராஜேஷ் அவர்கள் உடல்நலக்குறைவால் மறைந்த செய்தி அறிந்து வருந்தினேன். அவரது ஆன்மா இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாற இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன். அவரது இழப்பால் வாடும் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

ரஜினிகாந்த்

ரஜினிகாந்த்
ரஜினிகாந்த்

என்னுடைய நெருங்கிய நண்பர், நடிகர் ராஜேஷ் அவர்களின் அகால மரணச் செய்தி எனக்கு அதிர்ச்சியளிக்கிறது. மிகுந்த மன வேதனையைத் தருகிறது.

அருமையான மனிதர், அவருடைய ஆத்மா சாந்தியடையட்டும்.

அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள்.

கமல்ஹாசன்

கமல்ஹாசன்
கமல்ஹாசன்

தேடல் உள்ள நடிப்புக் கலைஞர்களில் அதிகம் வாசிப்பதையும் வாசித்ததைச் சிந்திப்பதையும் வழக்கமாகக்கொண்டவர் அன்பு நண்பர் ராஜேஷ். தன் வாழ்வின் இறுதிவரை உற்சாகமும் செயல்பாடும் குறையாமல் வாழ்ந்த அவரது மறைவு பெரும் வருத்தத்தை ஏற்படுத்துகிறது. அவரை இழந்து வேதனைப்படும் குடும்பத்தாருக்கு என் ஆறுதல்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் அவரின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com