குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் விமான விபத்து ஏற்பட்ட இடத்தில் நேரில் சென்று ஆய்வு செய்த பிரதமர் மோடி, மருத்துவமனயில் சிகிச்சை பெற்று வருபவர்களையும் நலம் விசாரித்தார்.
நேற்று குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து, லண்டனுக்கு புறப்பட்ட, 'ஏர் இந்தியா' போயிங் 787 - டிரீம் லைனர் விமானம், 30 வினாடிகளில் கீழே விழுந்து வெடித்தது.
600 - 800 அடி உயரமே பறந்த விமானம், மருத்துவக் கல்லுாரி விடுதி மீது பயங்கரமாக மோதி விபத்துக்கு உள்ளானதில், குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி உட்பட 241 பேர் உயிரிழந்தனர். இந்த கோர விபத்தில், ஒரேயொரு பயணி மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தார்.
விடுதியில் மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த மாணவர்கள், குடியிருப்போர் பலர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தது, நாடு முழுதும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தற்போது வரை இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 265 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில், விமான விபத்து நடந்த பகுதியில் ஆய்வு செய்வதற்காக பிரதமர் மோடி இன்று ஆமதாபாத் வந்தார். அவர் விமான விபத்து நடத்த இடத்தில் நேரில் ஆய்வு செய்தார். விபத்து நிகழ்ந்த இடத்தில் நடந்து வரும் மீட்பு பணிகளை பிரதமர் மோடி பார்வையிட்டார்.
அவர் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினரையும், காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களையும் சந்தித்து ஆறுதல் தெரிவித்துள்ளார்.
மேலும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் விஸ்வாஸ்குமாரை பிரதமர் மோடி நேரில் பார்த்து நலம் விசாரித்தார்.