காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கம் - கருத்துக்கேட்பு தள்ளிவைப்பு

காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கம் - கருத்துக்கேட்பு தள்ளிவைப்பு

சென்னையை அடுத்த காட்டுப்பள்ளியில் துறைமுக விரிவாக்கம் தொடர்பாக நடைபெறவிருந்த கருத்துக் கேட்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சென்னை, எண்ணூரை அடுத்த காட்டுப்பள்ளியில் தனியார் துறைமுகம் இயங்கிவருகிறது. இதை விரிவாக்கம் செய்வது குறித்து சில வாரங்களாக தகவல்கள் வெளியாகின. அப்படி விரிவாக்கம் செய்யப்படுமானால், பல வகைகளில் பாதிப்புகள் உண்டாகும் என எதிர்ப்பு கிளம்பியது.

ஏற்கெனவே சென்னை, எண்ணூர் துறைமுகங்களால் ஏற்பட்ட நில, கடல் சூழல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. திருவொற்றியூருக்கு வடக்கே மிக அண்மையாக கடலோரம் இருக்கும் குடியிருப்புகள் கடலரிப்பால் நாசமாகின. கடல் நீர் பல ஊர்களுக்குள் புகுந்து நூற்றுக்கும் மேற்பட்டவர்களின் வீடுகளை நீருக்குள் இழுத்துச் சென்றுள்ளன என்றும் கூறப்படுகிறது.

மேலும், காட்டுப்பள்ளி தனியார் துறைமுகம் வந்த பிறகு, கடலியல் நிலவியல் சூழல் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன என சுற்றுச்சூழல் காப்பு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஆனாலும் திமுக ஆட்சிக்கு வந்தபிறகு இந்தத் திட்டத்துக்கு ஆதரவு தர கொள்கை முடிவு எடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிகிறது. இதற்கான கருத்துக்கேட்பு அடுத்த மாதம் 9ஆம் தேதி பொன்னேரி வட்டம் காட்டுப்பள்ளி கிராமத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

பல தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், குறிப்பாக, கடந்த ஆட்சியில் திமுக சார்பில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துவிட்டு, இப்போது நேர்மாறாக அதே திட்டத்தை நடைமுறைப்படுத்த முயல்வதா என விமர்சனமும் வைக்கப்பட்டது.

இந்த நிலையில், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் இன்று வெளியிட்ட அறிவிப்பு ஒன்றில், கருத்துக்கேட்பு தள்ளிவைக்கப்படுகிறது எனத் தெரிவித்துள்ளார்.

ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் கருத்துக்கேட்பை நடத்துமாறு பல தரப்புகளில் இருந்தும் மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன; அதைக் கருத்தில்கொண்டு இப்போதைக்கு வரும் 5ஆம் தேதி கருத்துக்கேட்பை ஒத்திவைக்க முடிவுசெய்யப்பட்டுள்ளது என்று ஆட்சியரின் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com