பதிப்பாளர் பத்ரி சேஷாத்ரிக்கு நிபந்தனை ஜாமீன்!

குன்னம் நீதிமன்றத்தில் பத்ரி சேஷாத்ரி
குன்னம் நீதிமன்றத்தில் பத்ரி சேஷாத்ரி
Published on

பதிப்பாளர் பத்ரி சேஷாத்ரிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி குன்னம் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மணிப்பூர் வன்முறை தொடர்பாகவும், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் யூடியூப் சேனல் ஒன்றில் பேசியிருந்தார் பத்ரி சேஷாத்ரி.

இது குறித்து பெரம்பலூர் சேர்ந்த வழக்கறிஞர் கவியரசு அளித்த புகாரின் பேரில், பெரம்பலூர் காவல்துறையினர் பத்ரி சேஷாத்ரியை கடந்த சனிக்கிழமை கைது செய்தது. அவர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

மருத்துவ பரிசோதனைக்கு பிறகு, அவர் குன்னம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை ஆகஸ்ட் 11ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்குமாறு குன்னம் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்தநிலையில், குன்னம் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி பத்ரி சேஷாத்ரி மனு தாக்கல் செய்தார் . அவருடைய ஜாமீன் மனு மீது இன்று விசாரணை நடைபெற்றது. அப்போது, பத்ரி சேஷாத்ரியை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வேண்டும் என்றும் அவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என்றும் போலீஸ் தரப்பில் வாதம் செய்யப்பட்டது.

அப்போது நீதிபதி, பத்ரி சேஷாத்ரியை போலீஸ் காவலில் எடுக்க முகாந்திரம் இல்லை, அதற்கான தேவையும் இல்லை என கூறி காவல் துறையின் மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி, பத்ரி சேஷாத்ரிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

அதேபோல், மறு உத்தரவு வரும் வரை ஸ்ரீரங்கத்தில் தங்கி, அங்குள்ள நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என பத்ரி சேஷாத்ரிக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com