விபத்தில் உயிரிழந்த ஒளிப்பதிவாளர் சங்கர்.
விபத்தில் உயிரிழந்த ஒளிப்பதிவாளர் சங்கர்.

உயிரிழந்த ஒளிப்பதிவாளர்! சோகக் கதை

அப்பாவுடன் பிறந்தநாளைக் கொண்டாட காத்திருந்த சிறுவனக்கு இடியாய் வந்தது துயர செய்தி. மகனுக்கு கேக் வாங்கிக் கொண்டு, வீடு திரும்பிய அப்பா விபத்தில் சிக்கி உயிரிழந்ததுதான் அந்த துயர செய்தி.

நெல்லை மாவட்ட புதியதலைமுறை ஒளிப்பதிவாளராக வேலைப் பார்த்து வந்தவர் சங்கர். அவருக்கு திருமணமாகி மனைவியும், ஏழு வயதில் ஒரு மகனும் உள்ளார்.

நேற்று சக ஒளிப்பதிவாளர்களுடன், சந்திராயன் தொடர்பான செய்திக்காக நெல்லையிலிருந்து - திருவனந்தபுரம் சென்ற சங்கர், பணி முடிந்து மாலை வீடு திரும்புகையில், மகனின் பிறந்தநாளைக் கொண்டாடுவதற்காக கேக் வாங்கி வந்துள்ளார்.

அவர்கள் நாங்குநேரி நான்குவழிச் சாலையில் வந்துகொண்டிருந்தபோது, வாகனம் கட்டுப்பாட்டை இழந்து, சாலையின் நடுவிலிருந்த தடுப்பின் மோதி விபத்துக்குள்ளானது. இதில் சங்கர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவருடன் காரில் பயணித்த நெல்லை மாவட்ட செய்தியாளர் நாகராஜ், ஒளிப்பதிவாளர்கள் வள்ளிநாயகம், நாராயண மூர்த்தி ஆகியோர் காயங்களுடன் பாளையங்கோட்டை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், கார் ஓட்டி வந்தது சங்கர்தான் என்பது தெரியவந்தது.

சங்கர் மறைவுக்கு அரசியல் கட்சியினர் பலரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், சங்கரின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ. 5 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளார்.

மேலும், புதியதலைமுறை தொலைக்காட்சி இன்று 13ஆம் ஆண்டு பிறந்தநாளை கொண்டாடுகிறது. தான் பணிபுரியும் நிறுவனத்தின் பிறந்தநாளையும் மகனின் பிறந்தநாளையும் ஒருசேர கொண்டாடி இருக்க வேண்டிய சங்கர் உயிரிழந்திருப்பது துரதிர்ஷ்டமானது.

logo
Andhimazhai
www.andhimazhai.com