ராகுல் காந்தி
ராகுல் காந்தி

ராகுல் தண்டனை நிறுத்திவைப்பு; எம்.பி.யாகத் தொடரமுடியும்!

அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு எதிரான சிறை தண்டனை வழக்கை உச்ச நீதிமன்றம் நிறுத்து வைத்து உத்தரவிட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி குறித்த அவதூறு வழக்கில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனைக்குத் தடைவிதிக்க குஜராத் உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. எனவே, உச்ச நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மேல்முறையீடு செய்திருந்தார்.

ராகுல் காந்தி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரத்தில், ‘நான், அவதூறு வழக்கில் குற்றவாளி இல்லை. என்னுடைய பேச்சில் தவறு எதுவும் இல்லை. எனவே, என்னால் மன்னிப்பு கோர முடியாது. மன்னிப்புக் கேட்க வேண்டுமென்றால் முன்பே கேட்டிருப்பேன்’ என்று கூறியிருக்கிறார்.

இந்நிலையில், ராகுல் காந்தி தாக்கல் செய்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது, ராகுல் காந்திக்கு ஆதரவாக வாதாடிய மூத்த வழக்கறிஞர் அபிஷேக், “ராகுல் காந்தி எந்த ஒரு சமூகத்தையும் குறிப்பிட்டு பேசவில்லை. அவர் யாரைக் குறிப்பிட்டு பேசினாரோ, அவர்கள் வழக்கைத் தொடராமல், பாஜகவினர் தான் வழக்கு தொடர்ந்து உள்ளனர்” என்றார்.

எதிர்த்தரப்பில் வாதாடிய வழக்கறிஞர், “ராகுல் காந்தி உள்நோக்கத்தோடு தான் பேசியுள்ளார். ஒட்டுமொத்த மோடி சமூகத்தையே அவர் இழிவு படுத்தியுள்ளார்” என்றார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ராகுல் காந்திக்கு வழங்கப்பட்ட தண்டனை குறித்து தனி நீதிபதி எதையும் குறிப்பிடவில்லை. இது போன்று உட்சபட்ச தண்டனை வழங்கும் போது, அதற்கான காரணத்தை விசாரணை நீதிமன்றங்கள் குறிப்பிட வேண்டும். ராகுல் காந்தி வழக்கில் இதை குறிப்பிடவில்லை.

எம்.பி., எம். எல்.ஏக்கள் தொடர்பான தகுதி நீக்க வழக்கில் பாதிப்பு என்பது ஒருவர் தொடர்புடையது மட்டும் இல்லை, அவர்களின் தொகுதி மக்கள் தொடர்பானது. மக்கள் பிரதிநிதிகள் பொதுவெளியில் பேசும்போது கவனத்துடன் பேச வேண்டும் என நீதிபதிகள் சுட்டிக் காட்டினார்கள்.

மக்கள் பிரதிநிதிகள் இல்லை என்றால், அவர்களின் தொகுதி பாதிக்கப்படும் என்பதால், ராகுல் காந்திக்கான தண்டனை நிறுத்தி வைக்கப்படுவதாக நீதிபதிகள் கூறினர்.

நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பால், ராகுல் காந்தி மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினராக தொடர வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com