கி.ரா விருது பெறும் எழுத்தாளர் எஸ்.வி. ராஜதுரை!
கோவை விஜயா பதிப்பகத்தின் 'விஜயா வாசகர் வட்டம்' சார்பில், 2023ஆம் வருடத்திற்கான கி.ரா விருதுக்கு எழுத்தாளர் எஸ்.வி. ராஜதுரை தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக கோவை விஜயா பதிப்பகம் நிறுவனர் மு.வேலாயுதம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “நான் மழைக்குத்தான் பள்ளிக்கூடம் ஒதுங்கியவன். பள்ளிக்கூடத்தை பார்க்காமல் மழையைப் பார்த்துக்கொண்டு இருந்துவிட்டேன்'’ என்று தன்னைப் பற்றிக் கூறிக் கொண்ட, கரிசல் இலக்கியத்தின் நாயகன் ''கி.ரா.'' என்றழைக்கப்படும் கி. ராஜநாராயணன், புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் சிறப்பு பேராசிரியராக பணியாற்றிய பெருமைக்குரியவர். ''கரிசல் வட்டார அகராதி'' யை, தமிழ் உலகுக்கு தந்த முன்னோடி. சாகித்ய அகாடமி விருதுக்கு பெருமை சேர்த்த ''கி.ரா.'' வின் நினைவை போற்றும் வகையில், கோவை விஜயா பதிப்பகத்தின், ''விஜயா வாசகர் வட்டம்'' சார்பில், ஒவ்வொரு ஆண்டும், சிறந்த படைப்பாளிகளுக்கு ''கி.ரா."விருது வழங்கப்பட்டு வருகிறது. ஐந்து லட்சம் ரூபாய் மற்றும் கேடயம் வழங்கப்படுகிறது. இந்த விருது தொகையை, சக்தி மசாலா நிறுவனம் வழங்கி கவுரவிக்கிறது. 2023 ஆம் வருடத்திற்கான ''கி.ரா.'' விருதுக்கு, பிரபல மார்க்சிய,பெரியாரிய அறிஞர் எஸ்.வி. ராஜதுரை தேர்வு செய்யப்பட்டிருக்கிறார் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
கோவையில் வரும் செப்டம்பர் 17 ஆம் தேதி, ஞாயிற்றுக் கிழமை நடைபெறும், விருதளிப்பு விழாவில், வெ. இறையன்பு ஐ.ஏ.எஸ். தலைமையேற்று, எழுத்தாளர் எஸ்.வி. ராஜதுரைக்கு ''கி.ரா.'' விருது வழங்கி சிறப்பிக்க இருக்கிறார்.
எழுத்தாளர் எஸ்.வி. ராஜதுரை பற்றிய குறிப்பு;
1940ஆம் ஆண்டு ஏப்ரல் 10ஆம் நாள், ஈரோடு மாவட்டம், தாராபுரத்தில் பிறந்த எஸ்.வி. ராஜதுரை (இயற்பெயர் கா.மனோகரன்), சென்னை லயோலாக் கல்லூரியில் இடைநிலை வகுப்பு கற்றார். தலித் மாணவர்களுக்காக ‘காந்தி பொதுநல மன்றம்’ என்ற மாணவர் விடுதியை, 1954-56 ஆம் ஆண்டுகளில் கட்டியவரும், தாராபுரம் உயர்நிலைப் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றியவருமான,தனது தந்தை காளியப்பனிடமிருந்து சமுதாய நோக்கையும் சாதி, மத, சமத்துவக் கண்ணோட்டத்தையும் எஸ்.வி. ராஜதுரை (எஸ்.வி.ஆர்.) கற்று கொண்டார்.
அதேசமயம், தந்தையாரின் காந்தியக் கண்ணோட்டத்திற்கு நேரெதிரான பெரியாரியம், திராவிட இயக்கத்தாலும் ஈர்க்கப்பட்ட எஸ்.வி.ஆர்., தந்தை பெரியாரையும், அறிஞர் அண்ணாவையும் தனக்குக் கிடைத்த முதல் பல்கலைக் கழகங்கள் என்று கருதினார். கல்லூரிப் படிப்பைத் தொடர முடியாமல், 17 வயதிலிருந்தே குடும்பப் பொறுப்பை ஏற்றார்.
உயர்நிலைப் பள்ளியில் அவருக்கு ஆங்கிலம் கற்பிக்கும் ஆசிரியராக இருந்தவர், ‘சரஸ்வதி’ பத்திரிகை ஆசிரியர் விஜயபாஸ்கரனின் தம்பி பூபேந்திரநாத், உலக இலக்கியங்கள் அவருக்கு கற்றுத் தந்தார். எட்டாம் வகுப்புப் படிக்கும்போதே அவர் பெற்றிருந்த ஆங்கில அறிவு, பின்னாளில் பல மொழியாக்கங்களைச் செய்வதற்கான அடித்தளமாக அமைந்தது. 1965 முதல் இந்தியப் பொதுவுடைமை இயக்கத்தில் அவர் இயங்கி வந்தார்.
தற்போது, அரசியல் செயல்பாடுகள் எதிலும் ஈடுபடாமல், தனது கடும் உடல் நோயை, மன வலிமையால் வென்று, எழுதுவதிலும், மொழியாக்கம் செய்வதிலும்அவர் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.
பொள்ளாச்சியில் மர வேலைத் தொழிலாளர் சங்கம், தட்சிண ரயில்வே மஸ்தூர் சங்கம், நீலகிரி மாவட்டத்தில் அரசிதழ் பெறா அரசுப் பணியாளர் சங்கங்களில் பணியாற்றினார். .1965இல் கோவையில் செயல்பட்டுவந்த ‘சிந்தனை மன்றத்தில்’செயலர் பொறுப்பு வகித்தார்.
அவரது எழுத்துக்கள், முதன்முதலாக, கோவையிலிருந்து, 1967இல் ‘புதிய தலைமுறை’ மாத ஏட்டில் வெளிவந்தன. கோவை ஞானி, புலவர் ஆதி, எஸ்.என். நாகராஜன் ஆகியோருடன் அந்த ஏட்டின் ஆசிரியர் குழுவில் பணியாற்றினார்.
பின்னர்,‘கசடதபற’,‘பிரக்ஞை’ ஆகிய சிற்றேடுகளில் எழுதியுள்ளார். கோவை ஞானியுடன் ‘பரிமாணம்’ என்னும் மார்க்ஸிய ஏட்டின் ஆக்கங்களில் முக்கியப் பங்கேற்ற அவர், ‘மார்க்சியம் இன்று’ என்ற ஏட்டின் ஆசிரியர் பொறுப்பேற்றார்.
ச.சீ. கண்ணனுடன் (நேத்ரா) இணைந்து 1981இல் சென்னையில் ‘காரல் மார்க்ஸ் நூலகத்தை’ நிறுவினார்.
1982 முதல் 2000 வரை மக்கள் உரிமைக் கழகத்தில் தேசியத் துணைத் தலைவர் பொறுப்பு வகித்து, ராம் ஜெத்மலானி, ஜார்ஜ் ஃபெர்னாண்டெஸ் போன்றோருடன் பணியாற்றினார்.
முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி வி.ஆர். கிருஷ்ணய்யரின் தலைமையில் இயங்கிவந்த “மரண தண்டனைக்கு எதிரான இயக்க”த்தின் அனைந்த்திந்திய அமைப்பாளராகச் செயல்பட்டார்.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில், சுற்றுச்சூழல் மேம்பாட்டிற்காக, பொதுமக்களுடன் இணைந்து செயல்பட்டு வெற்றி பெற்றார்.
சமீபத்தில், பழங்குடி மக்களின் பிள்ளைகளுக்கானகல்வி உதவிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு நிறுத்தப்பட்டதால், கல்வி கற்கும் வாய்ப்பை இழக்கும் நிலைக்குத் தள்ளப்பட்ட மாணவர்கள் சார்பாக, அரசாங்கத்திடமும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையத்திடமும் முறையிட்டு பழைய சலுகைகளை மீட்டுத் தந்தார்.
மார்க்ஸியம் மட்டுமின்றி, எக்ஸிஸ்டென்ஷியலிசம் போன்ற மேலைத் தத்துவங்களையும் தமிழுக்கு அறிமுகப்படுத்தினார் .
ஓவியக் கலையிலிருந்து திரைப்படக் கலை வரை, அரசியல் விமர்சனக் கட்டுரைகளிலிருந்து ஆழமான தத்துவ விசாரணைகள் வரை, இலக்கிய விமர்சனத்திலிருந்து மனித உரிமைகள் பற்றிய ஆய்வுகள் வரை, தமிழ் திரைப்பட இசையிலிருந்து ஜாஸ் வரை பல்வேறு விஷயங்கள் அவரது ஆய்வுக்கும் அக்கறைக்கும் உட்பட்டுள்ளன. ஆங்கிலத்திலும் சரளமாக எழுதும் அவர், குறிப்பிடத்தக்க மொழியாக்கங்களைச் செய்துள்ளார்.
அவரது எழுத்து பணிகளில் உறுதுணையாக இருந்தவர் தோழர் வ. கீதா.
வ. கீதாவுடன் இணைந்து எஸ்.வி.ஆர்., தமிழாக்கம் செய்த குழந்தைகளுக்கான சிறு நூலொன்றை, மகிழ்ச்சியோடு வரவேற்று, குழந்தைகளுக்கான கதைகளை எவ்வாறு எழுத வேண்டும் என்ற அறிவுரையுடன் ''கி.ரா.''. எழுதிய நீண்ட கடிதத்தை வ. கீதா பாதுகாத்து வைத்துள்ளார்.
2007,2008 ஆம் ஆண்டுகளில், திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகத்தின், பெரியார் உயராய்வு மன்றத் தலைவராகவும், பேராசிரியராகவும் பணியாற்றினார்.
எஸ்.வி. ராஜதுரை, தற்போது, தன் துணைவியாருடன், கோவை மாவட்டம் அன்னூரில், ஒரு முதியோர் இல்லத்தில் வசித்து வருகிறார்.
இலக்கியம், சமூகம், மக்கள் சேவையில் தன் வாழ்நாளை அர்ப்பணித்த எழுத்தாளர் எஸ்.வி. ராஜதுரைக்கு, கோவை விஜயா வாசகர் வட்டத்தின் சார்பில் ''கி.ரா.'' விருது வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறோம்.
கோவையில் நடைபெற இருக்கும் ''கி.ரா.'' விருது விழாவில், வாசகர்கள், எழுத்தாளர்கள், மார்க்சிய, பெரியாரிய, திராவிட பற்றாளர்கள் பங்கேற்று, எழுத்தாளர் எஸ்.வி. ராஜதுரைக்கு மரியாதையை செய்ய அன்புடன் அழைக்கிறோம்.
இதற்கு முன்பு விஜயா வாசகர் வட்டம் சார்பில், கடந்த ஆண்டுகளில், ''கி.ரா.'' விருது, எழுத்தாளர்கள் கண்மணி குணசேகரன், கோணங்கி, அ.முத்துலிங்கம் ஆகியோருக்கு வழங்கப்பட்டு இருக்கிறது.
இலக்கிய உலகில் தடம் பதித்தவர்களுக்கு,''கி,ரா.'' விருது அளிக்கும் இந்த பெரும் பணியில், எங்களுடன் இணைந்து பணியாற்றி, அதற்கு வித்திட்டு சாத்தியப்படுத்திய, இலக்கிய ஆர்வலரும், திரைப்பட கலைஞருமான, அன்பு சகோதரர் சிவகுமார் அவர்களுக்கும், ''கி.ரா.'' விருதுத் தொகை வழங்கி சிறப்பித்துவரும் புரவலர், சக்தி மசாலா நிறுவனர்கள் பி.சி. துரைசாமி - சாந்தி தம்பதியருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.