கோவையில் சிறுமிகளுக்கு தனது வீட்டில் வைத்து பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் மதபோதகர் ஜான் ஜெபராஜ் கைது செய்யப்பட்டார்.
தென்காசி மாவட்டம் செங்கோட்டையைச் சேர்ந்தவர் ஜான் ஜெபராஜ், சமூக ஊடகத்தில் கிறிஸ்துவ மதப்பாடல்கள் பாடி பிரபலமானார். கோவை மாவட்டத்தில், 'கிங்ஸ் ஜெனரேஷன்' என்ற தேவாலயத்தில் மதபோதகராகவும் உள்ளார்.
இவர், கடந்தாண்டு மே 21இல், கோவை ஜி.என்.மில்ஸ் பகுதியில் உள்ள தன் வீட்டில் நிகழ்ச்சி ஒன்றை நடத்தினார். அதில், பங்கேற்ற இரண்டு சிறுமியருக்கு, ஜான் ஜெபராஜ் பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்ததாக புகார் எழுந்தது.
இது தொடர்பான புகாரில், கோவை காந்திபுரம் மத்திய மகளிர் காவல் நிலையத்தில், ஜான் ஜெபராஜ் மீது, 'போக்சோ' சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. தலைமறைவான அவரை பிடிக்கும் பணியில், தற்போது தனிப்படை போலீசார் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில், இன்று பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் மதபோதகர் ஜான் ஜெபராஜ் கைது செய்யப்பட்டார். இது குறித்து காட்டூர் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜான் ஜெபராஜ் வெளிநாடுகளுக்கு அவர் தப்பிச் செல்லாமல் இருக்க, கோவை மாவட்ட காவல் துறை சார்பில், விமான நிலையங்கள், துறைமுகங்களுக்கு, 'லுக் அவுட் நோட்டீஸ்' வழங்கப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.