குடியரசு தினத்தை முன்னிட்டு, சென்னை மெரினா கடற்கரை உழைப்பாளர் சிலை அருகே, ஆளுநர் ரவி தேசியக்கொடி ஏற்றி வைத்தார்.
நாடு முழுவதும் 76ஆவது குடியரசுத் தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழக அரசின் சார்பில் சென்னை மெரினா கடற்கரை உழைப்பாளர் சிலை அருகே பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. ஆளுநர் ஆர்.என்.ரவி தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.
முன்னதாக, ஆளுநர் ரவியை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். முக்கிய அதிகாரிகளை ஆளுநருக்கு முதலமைச்சர் அறிமுகம் செய்து வைத்தார்.
அப்போது இந்திய விமானப் படை ஹெலிகாப்டர் மூலம் தேசிய கொடிக்கு மலர் தூவப்பட்டது. தொடர்ந்து முப்படை வீரர்கள் மற்றும் போலீசார் அணிவகுப்பு நிகழ்ச்சி நடந்தது. அணிவகுப்பு மரியாதையை ஆளுநர் ரவி ஏற்றுக்கொண்டார். சிறப்பாக செயல்பட்ட போலீசாருக்கு பதக்கங்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கி கவுரவித்தார். நிகழ்ச்சியில் நீதிபதிகள், அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். சென்னையில் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.