சமாஜ்வாதி எம்.பி.யை கரம்பிடிக்கிறாரா கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங்?

கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங் - சமாஜ்வாதி எம்.பி. பிரியா சரோஜ்
கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங் - சமாஜ்வாதி எம்.பி. பிரியா சரோஜ்
Published on

பிரபல கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங், சமாஜ்வாதி எம்.பி.யை திருமணம் செய்ய உள்ளதாகவும், இதற்காக நிச்சயதார்த்தம் நடந்ததாகவும் தகவல் வெளியானது. ஆனால், இதனை மறுத்த எம்.பி.யின் தந்தை, பேச்சுவார்த்தை மட்டும் நடந்து வருவதாக கூறியுள்ளார்.

உத்தரபிரதேச மாநிலம் அலிகார் நகரை சேர்ந்தவர் ரிங்கு சிங். இடது கை பேட்ஸ்மேனான இவர், கடந்த 2023 ஆண்டு அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் அறிமுகம் ஆனார். ஐ.பி.எல். தொடரில் கொல்கத்தா அணிக்காக விளையாடி வருகிறார். டி-20 தொடரில் உலக கோப்பை வென்ற இந்திய அணியில் இவர் இடம்பெற்றிருந்தார். வரும் 22ஆம் தேதி இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரிலும் இந்திய அணியில் இடம்பெற்றுள்ளார்.

தற்போது, 27 வயதாகும் இவர், சமாஜ்வாதி கட்சி எம்.பி. பிரியா சரோஜ் என்பவரை திருமணம் செய்ய உள்ளதாகவும், இதற்காக நிச்சயதார்த்தம் முடிந்ததாகவும் தகவல் வெளியானது. இதனையடுத்து சமூக ஊடகங்களில் அவருக்கு பலரும் பாராட்டுக்களைத் தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் எம்.பி.யின் தந்தை சரோஜ் டுபானி கூறியதாவது: பிரியா சரோஜ் தற்போது சில பணி காரணமாக திருவனந்தபுரத்தில் உள்ளார். இதுவரை அவருக்கும் ரிங்கு சிங்கிற்கும் இடையே நிச்சயதார்த்தம் நடக்கவில்லை. இரு குடும்பத்தினர் இடையே பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. ஆனால், நிச்சயதார்த்தம் என்பது, முற்றிலும் தவறான தகவல். இவ்வாறு அவர் கூறினார்.

ரிங்கு சிங், திருமணம் செய்யும் பிரியா சரோஜ், வாரணாசியை சேர்ந்தவர். உபி-யின் மச்லீஸ்வர் தொகுதியில் சமாஜ்வாதி சார்பில் தேர்வு செய்யப்பட்டவர். 25 வயதில் வெற்றி பெற்ற இவர், லோக்சபா இளம் வயது எம்.பி.க்களில் ஒருவர் என்ற பெருமை பெற்றுள்ளார்.

உச்சநீதிமன்ற வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். இவரது தந்தை சரோஜ் டுபானி. மூன்று முறை எம்.பி.ஆக இருந்தவர். தற்போது உ.பி. எம்.எல்.ஏ.ஆக உள்ளார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com