தனது சொந்த சகோதரியிடம் ரூ 17 கோடி மோசடி செய்ததாக பதியப்பட்ட வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் சண்முகநாதனின் மகன் ராஜாவை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரும், தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளருமான சண்முகநாதனின் மகன் ராஜா. இவர் தூத்துக்குடி மாநகராட்சி 19 வது வார்டு கவுன்சிலராக உள்ளார்.
இவர் மீது அவரின் உடன் பிறந்த அக்கா பொன்னரசு என்பவர் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸில் புகார் கொடுத்திருந்தார். அந்த புகாரில்,17 கோடி ரூபாய் ஏமாற்றிய ராஜா, அவரது மனைவி அனுஷா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.
இந்த புகாரின் பேரில் சென்னை மத்தியக் குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பொன்னரசி கொடுத்த புகாரில் உண்மை இருப்பதை உறுதி செய்து கொண்டனர். இந்த நிலையில் ராஜா எப்போது வேண்டுமானாலும் வெளிநாட்டிற்கு தப்பி செல்ல நேரிடும் என்பதால் அவருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்து அனைத்து விமான நிலையங்களிலும் வழங்கப்பட்டன.
இந்த நிலையில் கடந்த 10 ஆம் தேதி சென்னையில் இருந்து மலேசியா செல்ல ராஜா, சென்னை விமான நிலையத்திற்கு வந்தார். அப்போது அங்கு மத்திய குற்றப்பிரிவு போலீஸார் அவரை கைது செய்தனர். அவர் எழும்பூர் மத்திய குற்றப்பிரிவு மற்றும் குற்ற புலனாய்வு பிரிவு நீதிமன்ற நடுவர் முன்பு முன்னிறுத்தப்பட்டார்.