'பள்ளி, கல்லூரி விடுதிகள் இனி சமூகநீதி விடுதிகள்’

'பள்ளி, கல்லூரி விடுதிகள் இனி சமூகநீதி விடுதிகள்’
Published on

ஏழை மாணவர்களுக்கான பள்ளி, கல்லூரி விடுதிகள் இனி ‘சமூகநீதி விடுதிகள்’ என அழைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

பள்ளிகளில் ஏற்படும் சாதிய மோதல்களைத் தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்து ஆராய அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதியரசர் சந்துரு தலைமையிலான ஆணையம் பல்வேறு பரிந்துரைகளை தமிழ்நாடு அரசுக்கு வழங்கியிருந்தது. அதில், சாதி முன்னொட்டு பெயர்களுடன் அரசுப் பள்ளிகள் இருப்பதை நீக்க வேண்டும், அரசு, தனியார் பள்ளிகளின் பெயர்களோடு உள்ள சாதி முன்னொட்டுகளையும், பின்னொட்டுகளையும் நீக்க வேண்டும் என்று அந்த ஆணையம் பரிந்துரைத்திருந்தது.

இந்நிலையில், தமிழ்நாடு முழுவதும் பல்வேறு துறைகளின் கீழ் செயல்பட்டு வரும் ஏழை மாணவர்களுக்கான பள்ளி, கல்லூரி விடுதிகளின் பெயர்கள் மாற்றம் செய்யப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "தமிழ்நாடு முழுவதும் 727 பிற்படுத்தப்பட்டோர் நல விடுதிகள், 455 மிகப் பிற்படுத்தப்பட்டோர் விடுதிகள், 157 சீர்மரபினர் விடுதிகள், 20 சிறுபான்மையினர் நல விடுதிகள், ஆயிரத்து 332 ஆதிதிராவிடர் மாணவர் விடுதிகள், 48 பழங்குடியினர் விடுதிகள் என இரண்டாயிரத்து 739 விடுதிகளில் மொத்தம் ஒரு லட்சத்து 79 ஆயிரத்து 568 மாணவ, மாணவிகள் பயின்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடித்தட்டுக் குடும்பங்களை சார்ந்த இந்த மாணவர்களின் வாழ்வில் ஒளியேற்றும் அதே வேளையில் எதிர்கால சமுதாயத்தை ஒரு சமத்துவ சமுதாயமாக உருவாக்கிட, சாதி சமய உணர்வுகளை களைவது இன்றியமையாதது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் செயல்படும் பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகள் சமூகநீதி விடுதிகள் என்ற பொதுப் பெயரில் இனி அழைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

விடுதிகளுக்கு புதிய பெயர் சூட்டப்பட்டுள்ளதே தவிர, மாணவர்களுக்கான உரிமைகள், சலுகைகள் அனைத்தும் அப்படியே தொடரும் என்றும் பெரும் தலைவர்களின் பெயர் சூட்டப்பட்டு செயல்பட்டு வரும் விடுதிகள் அத்தலைவர்களின் பெயரோடு சமூகநீதி விடுதி என்று சேர்த்து அழைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இளம் சந்ததியினர் அனைவரும் சாதி வேறுபாடின்றி ஒன்றிணைந்து எதிர்கால தமிழ்ச் சமுதாயத்தை, சமத்துவச் சமுதாயமாகக் கட்டமைத்திட இந்த முயற்சிகள் அடித்தளம் அமைக்கும்” என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com