காதல் விவகாரம்… பள்ளி மாணவனுக்கு அரிவாள் வெட்டு… சக மாணவர்கள் 5 பேர் கைது!

காதல் விவகாரம்… பள்ளி மாணவனுக்கு அரிவாள் வெட்டு… சக மாணவர்கள் 5 பேர் கைது!
Published on

நெல்லையில் பள்ளி மாணவனை அறிவாளால் வெட்டிய சகா மாணவர்களை போலீசார் கைது செய்து சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் அடைத்துள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மாதேவி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுவன், அதே பகுதியில் உள்ள ஒரு அரசு பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறான். அதே ஊரைச் சேர்ந்த 17 வயது மாணவி ஒருவரும் இந்த மாணவனுடன் ஒரே வகுப்பில் படித்து வருகின்றனர். இதனால் இருவரும் நெருங்கி பழகி வந்ததாக கூறப்படுகிறது. இருவரும் செல்போனில் பேசிக் கொள்வதும் வழக்கமாம்.

இந்த விவகாரம் அதே பள்ளியில் 10ஆம் வகுப்பு படிக்கும் அந்த மாணவியின் தம்பிக்கு தெரியவந்தது. இதனால் ஆத்திரமடைந்த சிறுவன் தனது அக்காவுடன் பேசுவதை நிறுத்துமாறு அந்த பன்னிரண்டாம் வகுப்பு மாணவரிடம் அடிக்கடி மிரட்டும் வகையில் கூறியுள்ளார். ஆனால் அந்த மாணவர் அதை பொருட்படுத்தாமல் தொடர்ந்து பழகி வந்தார்.

இதனால் ஆத்திரமடைந்த மாணவியின் தம்பி, அந்த மாணவரை தாக்குவதற்கு, நேற்று முன்தினம் இரவில் மாணவியின் தம்பி உட்பட 5 சிறுவர்களும் சேர்ந்து அந்த மாணவரின் வீட்டுக்குச் சென்றுள்ளனர்.

அங்கு அந்த மாணவரை சந்தித்து, அவரை தனியாக அழைத்து வந்துள்ளனர். அப்போது, மறைத்து வைத்திருந்த அரிவாளால் அந்த மாணவரை வெட்டியுள்ளனர். இதில் அவரது கையில் வெட்டுக்காயம் ஏற்பட்டது. இதனால் அந்த மாணவன் அலறியுள்ளான். உடனே 5 சிறுவர்களும் அங்கிருந்து தப்பி ஓடினர். இதில் படுகாயமடைந்த பன்னிரண்டாம் வகுப்பு மாணவர் மீட்கப்பட்டு சேரன்மாதேவியில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளான். அங்கு மாணவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து, பன்னிரண்டாம் வகுப்பு மாணவரின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில், சேரன்மாதேவி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மாணவனை வெட்டிவிட்டு தப்பி ஓடிய மாணவியின் தம்பி உள்பட 5 சிறுவர்களையும் போலீசார் நேற்று அதிரடியாக கைது செய்தனர்.

பின்னர் அவர்களை சேரன்மாதேவி கோர்ட்டில் ஆஜர்படுத்திவிட்டு சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com