திட்டமிட்டப்படி பள்ளிகள் திறப்பு… வாரத்தில் ஒருநாள்... பள்ளி கல்வித்துறை முக்கிய உத்தரவு!

dpi campus
பள்ளிக் கல்வித்துறை வளாகம்
Published on

கோடை விடுமுறைக்கு பின் திட்டமிட்டப்படி வரும் ஜூன் 2ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

கோடை விடுமுறை இன்னும் சில நாட்களில் முடிவடைய போகின்றன. கடந்து ஆண்டு போல் வெயிலின் தாக்கம் அதிகம் இல்லாததால் வரும் ஜூன் 2ஆம் தேதி அனைத்து பள்ளிகளும் திறக்கப்படுகின்றன. கடந்த ஆண்டை போல பள்ளிகள் திறப்பு தள்ளிப் போகுமா? என்று கேள்வி எழுந்த நிலையில் அதற்கு வாய்ப்புகள் இல்லை என திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பள்ளிகள் திறப்பிற்கான முன்னேற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகின்றன. பள்ளி வளாகங்கள், வகுப்பறைகளை சுத்தம் செய்தல், பழைய பொருட்களை மாற்றுதல், குடிநீர், மின்சாரம், மேஜைகள், இருக்கைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உறுதி செய்தல் போன்ற வேலைகள் நடந்து வருகின்றன. மேலும் பள்ளிகள் திறக்கப்பட்ட முதல் நாளிலேயே பாடப் புத்தகங்கள் வழங்குவதற்கு ஏதுவாக தலைமை ஆசிரியர்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இதற்கிடையில் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையும் நடந்து கொண்டிருக்கிறது.

பள்ளிகள் திறக்கப்படும் ஜூன் 2ஆம் தேதி அன்று உரிய நேரத்திற்குள் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் வந்துவிட வேண்டும். தூய்மை பணிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளிட்டவை சரியாக இருக்கின்றனவா? என்பதை உறுதி செய்ய வேண்டும். பள்ளிகள் திறப்பில் எந்தவித சிரமமும் இன்றி சீரிய முறையில் நடைபெற மாவட்ட மற்றும் முதன்மை கல்வி அலுவலர்கள் உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. பள்ளிகளில் பாடப் புத்தகங்கள் தவிர்த்து நீதி போதனை வகுப்புகளை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

குறிப்பாக திருக்குறளை பயிற்றுவித்து, அவற்றுக்கு உதாரணமாக கதைகளை கூறி மாணவ, மாணவிகளை ஆசிரியர்கள் நல்வழிப்படுத்துவர். இதற்கேற்ப முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது ஜூன் 2ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டதும், 6 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கு திருக்குறள் வகுப்புகள் வாரத்தில் ஒருநாள் நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

தேர்ந்தெடுக்கப்பட்ட திருக்குறள் மூலம் நீதி போதனைகளை ஆசிரியர்கள் விளக்கிக் கூறுவர். இந்த ஏற்பாட்டை அரசு பள்ளிகளில் செய்துள்ளனர். ஒவ்வொரு வாரமும் செவ்வாய் அன்று காலை நடைபெறும் பிரார்த்தனை கூட்டத்தில் திருக்குறள் சம்பந்தமான உரையாடல் அல்லது கருத்துகளை வெளிப்படுத்தும் நாடகங்கள் இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கேற்ப ஆசிரியர்கள் உடன் மாணவர்கள் கலந்துரையாடி உரிய ஏற்பாடுகளை செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com