மாவட்டச் செயலாளர் கூட்டத்தில் செங்கோட்டையன்: இபிஎஸ் உடனான மோதல் முடிவுக்கு வந்ததா?

எடப்பாடி பழனிசாமி - செங்கோட்டையன்
எடப்பாடி பழனிசாமி - செங்கோட்டையன்
Published on

அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்று வரும் அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்றுள்ளார்.

பாஜக உடன் மீண்டும் கூட்டணி அமைத்து வரும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலை அதிமுக எதிர்கொள்ள உள்ளது. இந்தநிலையில் சென்னை பசுமை வழிச் சாலையில் உள்ள தனது இல்லத்தில் எடப்பாடி பழனிச்சாமி நேற்று முன் தினம் இரவு, கட்சி எம்.எல்.ஏக்களுக்கு விருந்து கொடுத்தார்.

இந்த இரவு விருந்தில் அதிமுக மூத்த தலைவர்கள், முன்னாள் அமைச்சர்கள் என பலரும் பங்கேற்றனர். சில முன்னாள் எம்.பிக்களும் பங்கேற்றனர். ஆனால், எடப்பாடி பழனிச்சாமி அளித்த இந்த விருந்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்கவில்லை.

கடந்த சில மாதங்களாகவே எடப்பாடி பழனிச்சாமிக்கும் செங்கோட்டையனுக்கும் இடையே பனிப்போர் நீடித்து வந்த நிலையில், அதிமுக - பாஜக கூட்டணி உறுதியானதை அடுத்து செங்கோட்டையனையும் சமரசம் செய்து வைத்ததாக கூறப்பட்டது.

இதையடுத்து ஈரோட்டில் கடந்த வாரம் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திலும், நேற்று சட்டப்பேரவையிலும் பேசிய செங்கோட்டையன் எடப்பாடி பழனிச்சாமியை புகழந்து தள்ளினார்.

இந்நிலையில் சென்னையில் நடைபெறும் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்றுள்ளார். இதன்படி செங்கோட்டையன் - எடப்பாடி பழனிசாமி இருவருக்கும் இடையே இருந்த மோதல் போக்கு முடிவுக்கு வந்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

தற்போது நடைபெற்று வரும் கூட்டத்தில் கட்சிப் பணிகள், பூத் கமிட்டி குறித்து மாவட்டச் செயலாளர்களுக்கு எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்த உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com