சூலூர் பாவேந்தர் பேரவைப் புலவர் செந்தலை ந.கௌதமன் மனைவியும், பல்லடம் அரசு மேல்நிலைப் பள்ளி முன்னாள் தலைமையாசிரியருமான சூ.அர.உலகநாயகி புதன்கிழமை இரவு 11.45 மணிக்கு காலமானார். அவருக்கு வயது 62.
தமிழுணர்வு காரணமாக செகதாம்பாள் என்ற தனது இயற்பெயரை உலகநாயகி என்று சட்டப்படி மாற்றிக் கொண்டார்.
உடல்நலக் குறைவால் உயிரிழந்த உலகநாயகியின் இறுதி ஊர்வலம், சூலூர் எஸ்.வி.எல்.நகர் 'தாயகம் ' இல்லத்திலிருந்து வியாழன் பகல் 12.00 மணிக்கு புறப்பட்டு, சூலூர் சமத்துவவனம் மின்மயானத்தில் இறுதிச் சடங்குகள் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுயமரியாதைத் திருமணம் செய்து கொண்ட ந.கவுதமன் - உலகநாயகி தம்பதிக்கு மகள் தாய்மொழி, மருமகன் மரு.கு.இளந்தமிழன், பெயர்த்தி தா.இ.அவனிஇளமொழி ஆகியோர் உள்ளனர்.
புலவர் செந்தலை ந. கௌதமன் துணைவியார் உலகநாயகி மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ”பகுத்தறிவுச் சிந்தனையாளர் புலவர் செந்தலை ந. கௌதமன் துணைவியார் உலகநாயகி, உடல்நலம் பாதிக்கப்பட்டு மறைவுற்றார் என்ற செய்தியறிந்து மிகவும் மனம் வருந்தினேன்.
பகுத்தறிவும், தமிழும் தமது இரு கண்களெனப் போற்றி வாழ்ந்த உலகநாயகி அம்மையாரை இழந்து வாடும் செந்தலை ந. கௌதமன் உள்ளிட்ட அவரது குடும்பத்தினருக்கும், பெரியார் தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.