அறநிலையத் துறை நிதியை கல்லூரிகள் கட்ட பயன்படுத்தி திமுக அரசு சதி செய்வதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ‘மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில் சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டுள்ளார்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் சுற்றுப்பயணத்தை நேற்று முன்தினம் தொடங்கிய ஈபிஎஸ், இரண்டாவது நாளான நேற்று கோவை வடக்கு மற்றும் தெற்கு தொகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். டவுன் ஹால் பகுதியில் எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு அளித்த பொதுமக்கள் மற்றும் அதிமுகவினர், 16 அடி உயரம் கொண்ட பிரம்மாண்ட ரோஜாப் பூ மாலையை அணிவித்தனர்.
வடவள்ளியில் பரப்புரை மேற்கொண்ட போது பேசிய ஈபிஎஸ்,
“நாங்கள் ஆட்சியை விட்டும் வரும்போது அறநிலையத்துறையில் பணம் இருந்தது. அது இவர்களின் கண்ணை உறுத்தியது. அறநிலையத்துறை பணத்தை எடுத்து கல்லூரி கட்டுகிறார்கள். அதற்கென்று தனியாக நிதி ஒதுக்கி கல்லூரி கட்ட வேண்டாமா? அதிமுக ஆட்சியில் அரசு பணத்தில் கல்லூரி கட்டினோம். ஆனால் நீங்கள் வேண்டும் என்றே திட்டமிட்டு அறநிலையத்துறையில் உள்ள பணத்தை எடுத்து கல்லூரி கட்டுவது எந்த விதத்தில் நியாயம்? இதை சதி செயலாகத்தான் மக்கள் பார்க்கின்றனர். இது தொடர்பாக நிறைய கோரிக்கைகள் என்னிடம் வந்துள்ளன.” என்றார்.
அவரின் இந்த பேச்சு சமூக ஊடகத்தில் விவாதத்தை கிளப்பியுள்ளது. பாஜக எழுதி கொடுப்பதை எடப்பாடி பேசுகிறாரா? என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.