ஏழை மாணவர்களுக்கான பள்ளி, கல்லூரி விடுதிகள் இனி ‘சமூகநீதி விடுதிகள்’ என அழைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை அறிவித்திருந்தார். அதற்கு அதரவும் எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.
பள்ளிகளில் ஏற்படும் சாதிய மோதல்களைத் தடுப்பதற்கான பரிந்துரைகளை ஓய்வுபெற்ற நீதியரசர் சந்துரு தலைமையிலான ஆணையம் தமிழ்நாடு அரசுக்கு வழங்கியிருந்தது.
அதில், சாதி முன்னொட்டு பெயர்களுடன் அரசுப் பள்ளிகள் இருப்பதை நீக்க வேண்டும், அரசு, தனியார் பள்ளிகளின் பெயர்களோடு உள்ள சாதி முன்னொட்டுகளையும், பின்னொட்டுகளையும் நீக்க வேண்டும் என்று அந்த ஆணையம் பரிந்துரைத்திருந்தது.
அதன் ஒரு பகுதியாக, தமிழ்நாடு முழுவதும் பல்வேறு துறைகளின் கீழ் செயல்பட்டு வரும் ஏழை மாணவர்களுக்கான பள்ளி, கல்லூரி விடுதிகளின் பெயர்கள் மாற்றம் செய்யப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை அறிவித்திருந்தார். அவரின் இந்த அறிவிப்புக்கு அரசியல் கட்சியினரிடம் ஆதரவும் எதிர்ப்பும் ஒரேசேர கிளம்பியுள்ளன. அவை பின்வருமாறு
தொல். திருமாவளவன் – விசிக தலைவர்
பல்வேறு துறைகளின் கீழ் செயல்படும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான விடுதிகள் இனி சமூகநீதி விடுதிகள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளதை மனப்பூர்வமாக வரவேற்று பாராட்டுகிறோம்.
அன்புமணி – பாமக தலைவர்
தமிழ்நாட்டில் பல்வேறு அரசுத் துறைகளின் கீழ் செயல்பட்டு வரும் 2,739 விடுதிகளும் இனி சமூகநீதி விடுதிகள் என்று அழைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். சமூக நீதி என்ற பெயரை மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பயன்படுத்துவதை விட பெரிய கொடுமையும், முரண்பாடும் இருக்க முடியாது.
வாழும் காலத்தில் ஒருவரை கொடுமைப்படுத்தி படுகொலை செய்து விட்டு, அவரது கல்லறையில் பெயரை பொறிப்பது எப்படியோ, அப்படித்தான் மு.க.ஸ்டாலின் அவர்களின் செயல்பாடுகளும் அமைந்திருக்கின்றன. தமிழ்நாட்டில் சமூகநீதியை ஒட்டுமொத்தமாக படுகொலை செய்து விட்டு, அதற்கு பரிகாரம் தேடும் வகையில் சமூகநீதி, சமூகநீதி என்று கூறிக் கொண்டிருக்கிறார். சீனி சக்கரை சித்தப்பா என்று எழுதிக் காட்டினால் அது இனிக்காது என்ற அடிப்படைக் கூட அவருக்கு தெரியவில்லை.
திமுக ஆட்சிக்கு வந்து நான்கரை ஆண்டுகள் ஆகி விட்ட நிலையில் சமூகநீதியைக் காக்க இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. இந்தியாவில் கர்நாடகம், பிகார், தெலுங்கானம், ஆந்திரம் உள்ளிட்ட மாநிலங்களில் மாநில அரசுகளால் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டு விட்ட நிலையில், இன்று வரை தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை. அதற்கான அதிகாரம் மாநில அரசுக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில், தங்களுக்கு அதிகாரம் இல்லை என்று கூறி அந்த சமூகநீதிக் கடமையை தட்டிக்கழித்துக் கொண்டிருக்கிறார் மு.க.ஸ்டாலின்.
வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்க உச்சநீதிமன்றம் ஆணையிட்டு இன்றுடன் 1193 நாள்கள் ஆகிவிட்ட நிலையில் இன்று வரை வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை. அதேபோல் சமூகநீதி கோரும் பிற சமூகங்களுக்கும் துரோகத்தை மட்டுமே பரிசாக அளித்து வருகிறது திமுக அரசு.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களே... உங்களுக்கு ஒரு வேண்டுகோள்.......
சமூகநீதி என்பது மிகவும் புனிதமான சொல்..... அதை நீங்களும், உங்களைப் போன்றவர்களும் உச்சரித்து கொச்சைப்படுத்தாமல் இருங்கள்.
சீமான் – நாதக தலைவர்
சமூகநீதி என்றால் என்னவென்று முதலில் சொல்லிவிட்டு பிறகு சமூநீதி விடுதிகள் என்று அழையுங்கள். சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தச் சொல்லி நாங்கள் நீண்டகாலமாக வலியுறுத்தி வருகிறோம். சட்டநாதன் அறிக்கை, அம்பாசங்கர் அறிக்கையெல்லாம் கிடப்பில் போட்டவர்கள் இவர்கள்தான். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதில் என்ன பிரச்னை? வீட்டில் சனாதனத்தை வைத்துக் கொண்டு ரோட்டில் வந்து சனாதனத்தை ஒழிக்கிறோன் என பேசிக் கொண்டு இருக்கிறார்கள்.
அண்ணாமலை - பாஜக முன்னாள் தலைவர்
தமிழகம் முழுவதும் உள்ள மாணவர் விடுதிகள், முறையான பராமரிப்பின்றி, தரமான குடிநீர் வசதி இன்றி, சுத்தமான கழிப்பறை வசதிகள் இன்றி, பழுதடைந்து இடிந்து விழும் நிலையில் இருக்கின்றன. மாணவர் விடுதிகளில், தரமான உணவு, சுத்தமான குடிநீர் வழங்கப்படுவதில்லை என, மாணவர்கள் பலமுறை புகார்கள் தெரிவித்துள்ளனர்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை நடத்தும் 1,331 மாணவர் விடுதிகளில், 98,909 மாணவ, மாணவியர் தங்கிப் படித்து வருவதாகவும், இந்த மாணவர்களுக்கு உணவுச் செலவாக, ரூ.142 கோடி செலவிடப்பட்டுள்ளதாகவும் தி.மு.க. அரசு தெரிவித்திருந்தது. இதன்படி, சராசரியாக, ஒரு மாணவருக்கு, ஒரு நாளைக்கு ரூ.39 மட்டுமே உணவுக்காகச் செலவிடப்படுகிறது. ஆனால், ஒரு மாணவருக்கு தினம் ரூ.50 வீதம், மாதம் ரூ.1,500 உணவுப் படி வழங்கப்படுவதாகக் கூறி வருகிறார்கள்.
ஒரு நாளைக்கு ரூ. 50 உணவுப் படி என்பதே மிகக் குறைவாக இருக்கையில், தி.மு.க., அரசு உண்மையில் செலவிடுவது ரூ.39 மட்டுமே. ஆதிதிராவிடர் மாணவர்கள் விடுதியில் தங்கிப் படிக்கும் மாணவர்களுக்கான உணவுப் படியை, மாதம் ரூ.1,500இல் இருந்து, ரூ.5,000 ஆக உயர்த்த வேண்டும் என்று பலமுறை கோரிக்கை வைத்தும், முதல்வர் ஸ்டாலின் கண்டுகொள்ளாமல் இருக்கிறார்.
பட்டியல் சமூக மக்கள் மேம்பாட்டுக்காக மத்திய அரசு வழங்கும் நிதியையும், ஆதிதிராவிடர் பள்ளிகள், மாணவர் விடுதிகளை மேம்படுத்தச் செலவிடாமல், ஆண்டுதோறும் திருப்பி அனுப்பிக் கொண்டிருக்கிறது தி.மு.க., அரசு.
கடந்த ஆண்டு, திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே, ஆயக்குடி மாணவர் நல விடுதி மேற்கூரை இடிந்து விழுந்து, ஐந்து மாணவிகள் காயமடைந்தனர். தமிழகம் முழுவதும் மாணவர் விடுதிகள் இத்தனை அவலநிலையில் இருக்க, தனது விளம்பர ஆசைக்காக, விடுதிகளின் பெயரை மாற்றி விளையாட்டு காட்டிக் கொண்டிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின் விளம்பரத்துக்காகச் செலவிடுவதில் 1% கூட, மாணவர்கள் நலனுக்காகச் செலவிடவில்லை தி.மு.க., அரசு.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறைக்கான 2023 - 2024 விளம்பரச் செலவு, ரூ.1.65 கோடி. 2024 - 25 ஆண்டு விளம்பரச் செலவு, ரூ. 11.48 கோடி. இந்த பெயர் மாற்ற விளம்பரத்துக்கு இன்னும் சில கோடிகள் கணக்கு காட்டலாமே தவிர, இதனால் மாணவ, மாணவியருக்கு எந்தப் பயனும் இல்லை, இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.