யூரோ கோப்பை கால்பந்து தொடரின் அரையிறுதிப் போட்டியில், பிரான்ஸை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு ஸ்பெயின் முன்னேறியதுக்குப் பின்னால், ஹீரோவாகியிருக்கிறார் 16 வயதான லேமின் யமால்.
ஜெர்மனியின் மியுனிக் நகரில் நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் ஸ்பெயின் - பிரான்ஸ் அணிகள் மோதின.
ஆட்டத்தின் 8வது நிமிடத்தில் பிரான்ஸ் வீரர் கோலோ முவானி, கோல் அடித்து பிரான்ஸை முன்னிலைப்படுத்தினார்.தொடர்ந்து ஆட்டத்தின் 21வது நிமிடத்தில் 16 வயதே நிரம்பிய ஸ்பெயின் வீரர் லேமின் யமால் பதில் கோல் போட்டு அசத்தினார். தொடர்ந்து 25வது நிமிடத்தில் ஸ்பெயின் வீரர் ஓல்மோ கோல் போட, பெரும் ஆரவாரம் எழுப்பி மைதானத்தை ஸ்பெயின் ரசிகர்கள் அதிரச் செய்தனர்.
முதல் பாதி ஆட்டத்தில் ஸ்பெயின் முன்னிலை பெற்ற நிலையில் 2வது பாதி ஆட்டத்தில் பிரான்ஸின் கோல் முயற்சிகளை ஸ்பெயின் வீரர்கள் முறியடித்தனர். கடைசி வரை பரபரப்பாக நடைபெற்ற போட்டியில் 2க்கு 1 என்ற கோல் கணக்கில் ஸ்பெயின் வெற்றி பெற்றது.
28 ஆண்டுகளுக்குப் பிறகு பிரான்ஸ் முதல் முறையாக அரையிறுதியுடன் வெளியேறி உள்ளது.
ஸ்பெயின் வெற்றிக்கு வித்திட்ட 16 வயது வீரர் யமால்
ஸ்பெயின் அணி கோல் அடிக்க திணறிக் கொண்டிருந்த சமயத்தில், இடது முன் பாதத்தால் கோல் அடித்து அசத்தியிருக்கிறார் 16 வயதாகும் யமால். இவர் மிக இளம் வயதிலேயே யூரோ அரையிறுதியில் விளையாடிய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
முன்னதாக, 1958 உலகக்கோப்பையில் இதே பிரான்சுக்கு எதிராக பிரேசிலிய கால்பந்து மேதை பீலே அரையிறுதியில் ஆடும்போது அவருக்கு 17 வயது.
அதேபோல் இளம் வயதில் யூரோ அரையிறுதியில் கோல் அடித்தவரும் யமால்தான், இவருக்கு முன்பு கிறிஸ்டியானோ ரொனால்டோ 19 வயதில் யூரோவில் கோல் அடித்து சாதனையை வைத்திருந்தார்.
வைரலான புகைப்படம்
கால்பந்தாட்டத்தின் உலக ஜாம்பவனான லியோனல் மெஸ்ஸி கைக்குழந்தை ஒன்றை கைகளில் சுமந்தபடியான புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது.
மெஸ்ஸியின் கைகளில் தவழும் அந்த குழந்தை வேறு யாருமல்ல, யூரோ 2024 அரையிறுதியில் பிரான்ஸை வீட்டுக்கு அனுப்பும் ஸ்பெயின் அணியின் பிரமாதமான கோலை அடித்த யமால்தான்.
பார்சிலோனா கிளப்பில் ஆடும் வீரர்கள் காலண்டருக்காக குழந்தையுடன் போஸ் கொடுக்க வேண்டும். அப்படி மெஸ்ஸி கையில் தவழ்ந்த குழந்தைதான் யமால்.
பிரான்ஸை வெளியேற்றிய அந்த சமன் கோலை அடித்த நிலையில், ஆட்ட நாயகன் விருதையும் தட்டிச் சென்றுள்ள சூழலில், இந்தப் புகைப்படம் இன்று வைரலாகியுள்ளது.