இரண்டு சூப்பர் ஓவர்கள்; அலறிய சின்னசாமி ஸ்டேடியம்!

இரண்டு சூப்பர் ஓவர்கள்; அலறிய சின்னசாமி ஸ்டேடியம்!

இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதிய கடைசி டி20 போட்டி கிரிக்கெட் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியது என்று சொல்லலாம். யாருக்கு வெற்றி என்று தெரிந்து கொள்வதற்குள் திக்திக் மனநிலைதான்.

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளையும் இந்தியா வென்ற நிலையில் மூன்றாவது போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. முதல் இன்னிங்ஸில் 20 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 212 ரன்கள் எடுத்தது.

ஆனால் 22 ரன்களுக்கு நான்கு விக்கெட் இழப்பு என்ற நிலையில் இருந்து ரோஹித் சர்மா, ரிங்கு சிங் ஆகியோரின் அபார ஆட்டத்தால் இந்தியா தப்பிப் பிழைத்து 212 என்கிற பெரிய இலக்கை எட்ட முடிந்தது.

213 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை ஆப்கானிஸ்தான் அணி விரட்டியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ரஹ்மானுல்லா குர்பாஸ் மற்றும் இப்ராஹிம் ஸத்ரான் இணைந்து 93 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். குர்பாஸ் 32 பந்துகளில் அரை சதம் கடந்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து ஸத்ரான் அரை சதம் எடுத்து அவுட் ஆனார். அஸ்மதுல்லா ஓமர்சாய் ரன் ஏதும் எடுக்காமல் பெவிலியன் திரும்பினார்.

மொகமது நபி மற்றும் குல்பதின் நைப் இணைந்து 44 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இந்த கூட்டணி இந்திய அணிக்கு அச்சுறுத்தல் அளித்தது. நபி, 16 பந்துகளில் 34 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து கரீம் ஜனத் 2 ரன்களில் ரன் அவுட் ஆனார். விக்கெட்கள் சரிந்தாலும் குல்பதின், ஆப்கன் அணிக்கு தேவைப்பட்ட ரன்களை ஸ்கோர் செய்து கொண்டிருந்தார்.

கடைசி 2 ஓவர்களில் ஆப்கானிஸ்தான் வெற்றிக்கு 36 ரன்கள் தேவைப்பட்டது. 19-வது ஓவரின் 2-வது பந்தில் நஜிபுல்லா, 5 ரன்களில் வெளியேறினார். இருந்தும் அந்த ஓவரில் 17 ரன்கள் எடுத்தது ஆப்கானிஸ்தான். கடைசி ஓவரில் அந்த அணியின் வெற்றிக்கு 19 ரன்கள் தேவைப்பட்டது. ஸ்ட்ரைக்கில் குல்பதின் இருந்தார். முகேஷ் குமார், கடைசி ஓவரை வீசினார். கடைசி பந்தில் ஆப்கன் அணியின் வெற்றிக்கு 3 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் அந்த பந்தில் 2 ரன்கள் எடுத்த காரணத்தால் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளின் ரன்கள் சமன் ஆனது. 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 212 ரன்கள் எடுத்தது ஆப்கன். குல்பதின் 23 பந்துகளில் 55 ரன்கள் எடுத்தார். ஆட்டத்தில் முடிவை எட்ட சூப்பர் ஓவர் வீசப்பட்டது.

சூப்பர் ஓவர்: சூப்பர் ஓவரில் முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் முதல் பந்தில் குல்பதின் ஒரு ரன் எடுத்து ரன் அவுட்டானார். இந்தியா சார்பில் முகேஷ் குமார், சூப்பர் ஓவரை வீசினார். ஒரு பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸர் உடன் மொத்தமாக 16 ரன்கள் எடுத்தது ஆப்கானிஸ்தான். கடைசி பந்தில் ஓவர் த்ரோ முறையில் 3 ரன்கள் எடுக்கப்பட்டது.

17 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை சூப்பர் ஓவரில் இந்தியா விரட்டியது. இந்திய அணிக்காக யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ரோகித் சர்மா களம் கண்டனர். அஸ்மதுல்லா ஓவரை வீசினார். முதல் ஐந்து பந்துகளில் 15 ரன்கள் எடுத்தது இந்தியா. கடைசி பந்தில் வெற்றிக்கு 2 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ஒரு ரன் மட்டுமே எடுத்தது இந்தியா. இரு அணிகளும் தலா 16 ரன்கள் எடுத்த காரணத்தால் மீண்டும் சூப்பர் ஓவர் வீச முடிவு செய்யப்பட்டது.

அதன்படி முதலில் இந்தியா பேட் செய்தது. இந்த முறை ரோகித் மற்றும் ரிங்கு களம் கண்டனர். முதல் மூன்று பந்துகளில் 11 ரன்கள் எடுத்தார் ரோகித். 4-வது பந்தில் ரிங்கு ஆட்டமிழந்தார். சஞ்சு சாம்சன் பேட் செய்ய வந்தார். அடுத்த பந்தே ரோகித் ரன் அவுட் ஆனார். 2 விக்கெட்களை இழந்த காரணத்தால் 11 ரன்களுடன் ஒரு பந்து எஞ்சி இருக்க இந்திய அணியின் 2-வது சூப்பர் ஓவர் முடிவுக்கு வந்தது.

2-வது சூப்பர் ஓவரில் ஆப்கானிஸ்தானுக்கு 12 ரன்கள் தேவைப்பட்டது. நபி மற்றும் குர்பாஸ் பேட் செய்ய வந்தனர். ரவி பிஷ்னோய் அந்த ஓவரை வீசினார். முதல் பந்திலேயே ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார் நபி. ஜனத் பேட் செய்ய வந்தார். அவர் சிங்கிள் எடுக்க அடுத்த பந்தே ஆட்டமிழந்தார் குர்பாஸ்.

இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரை முழுவதுமாக இந்தியா வென்றுள்ளது.

ஹிட்மேன் ரோஹித் சர்மாவின் முழு ஆளுமையும் வெளிப்பட்ட ஆட்டமாக இந்தப் போட்டி அமைந்தது. தன் ஐந்தாவது டி20 சதத்தை அடித்ததுடன் ஓயாமல் இரண்டு சூப்பர் ஓவர்களிலும் அபாரமாக ஆடி வெற்றியைத் தேடித்தந்தார் ரோஹித். இந்த ஆண்டு நடக்க இருக்கும் டி20 உலகக்கோப்பை அணியில் அவர் இடம்பெறுவாரா என்ற விவாதங்களுக்கு இதன் மூலம் முற்றுப்புள்ளி வைத்துள்ளார் அவர்.

logo
Andhimazhai
www.andhimazhai.com