2.2 இலட்சம் காண்டம்கள்... ஒலிம்பிக்கில் விநியோகம்!
பாரிசில் நடைபெற்ற ஒலிம்பிக் திருவிழாவில் எந்தெந்த நாடுகள் எத்தனை பதக்கங்கள் எனும் எதிர்பார்ப்பு ஒருவழியாக முடிவுக்கு வந்தது.
உலக அளவிலான நிகழ்வுகளில் கேளிக்கையும் சுற்றுலாவும் சேர்ந்துகொள்வது புதியது அல்ல. அதுவும் விளையாட்டுத் திருவிழாக்கள் என்றால் சொல்லவே வேண்டாம். அதிலும் குறிப்பாக, பாரிஸ் போன்ற கலை, பண்பாட்டுச் சிறப்புகள் கொண்ட சுற்றுலா தலங்களில், பல்லாயிரக்கணக்கில் மக்கள் மொத்தமாகக் குவியும்போது கோலாகலமும் கொண்டாட்டமும் ஒருசேர நிகழ்வது இயற்கை.
உலக பிரபலங்கள், பெரும் செல்வந்தர்களின் வருகை ஒலிம்பிக் நடைபெறும் ஊரையே களைகட்டச் செய்துவிடும். இந்தக் கேளிக்கையில் சிவப்பு விளக்கு எனப்படும் பாலியல் சந்தையும் அடக்கம்.
இதன் மூலம் பெருமளவில் பாலியல் நோய்த் தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளதால், அதைத் தடுக்கும் நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன. ஒவ்வொரு ஒலிம்பிக்கிலும் இந்தச் செயல்பாடு இடம்பெற்றுவருகிறது.
அதன்படி, பாரிஸ் ஒலிம்பிக் கிராமத்தில் தங்கியிருந்த விளையாட்டுக்காரர்கள், ஊழியர்கள், ஊடகத்தினர் அனைவருக்கும் கருத்தடைத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. 20 ஆயிரம் பெண்களுக்கு கருத்தடை சாதனங்களும் இரண்டு இலட்சம் ஆண்களுக்கு ஆணுறைகளும் இலவசமாக வழங்கப்பட்டன.