ரவிச்சந்திரன் அஸ்வின்
ரவிச்சந்திரன் அஸ்வின்

டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்: அஸ்வின் செய்த சாதனை இதுமட்டுமா?

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் 500ஆவது விக்கெட்டை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.

இந்தியாவுக்கு வந்துள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றிபெற்று சமநிலையில் உள்ளது.

இந்த நிலையில், மூன்றாவது டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கி நடைபெற்றுவரும் நிலையில், இந்தியாவின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின் புதிய சாதனையைப் படைத்துள்ளார்.

இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரரான ஜாக் கார்வ்லேவை வீழ்த்தியதன் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 500 விக்கெட்டுகளை எடுத்த இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். அவர் இந்த சாதனையை 98ஆவது டெஸ்ட்டில் கைப்பற்றியுள்ளார்.

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் முத்தையா முரளிதரன், 800 விக்கெட்டுகளை வீழ்த்தி முதலிடத்தில் உள்ள நிலையில், அனில் கும்ளே 619 விக்கெட்டுகளை வீழ்த்தி நான்காவது இடத்தில் உள்ளார். அந்தப் பட்டியலில் அஸ்வின் ஒன்பதாவது இடத்தைப் பிடித்துள்ளார்.

இலங்கை சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனுக்குப் பிறகு 100 போட்டிகளில் 500 விக்கெட்டுகளை எடுத்த பெருமை அஸ்வினுக்கே சேரும்.

அதிவேகமாக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு. 45 போட்டிகளில் 250 விக்கெட்டும், 54 போட்டிகளில் 300 விக்கெட்டும் அஸ்வின் எடுத்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com