ஆகாஷ் மத்வால்
ஆகாஷ் மத்வால்

செல்லமே…. எங்கேடா இருந்தே இவ்வளவு நாளு? ஆகாஷ் மத்வாலைக் கொண்டாடும் மும்பை ரசிகர்கள்!

இறுதிச்சுற்றுக்கு தேர்வு ஆவதே தடுமாற்றம் என்ற நிலையில் இருந்த மும்பை அணி, ஒருவழியாக உள்ளே வந்ததுடன் எலிமினேட்டர் சுற்றில் லக்னோ சூப்பர் கிங்ஸ் அணியைப் பதம் பார்த்து, அடுத்த சுற்றுக்கு நுழைந்தே விட்டது!

சென்னை சேப்பாக்கம் மைதானம் வழக்கம்போல் தன்னுடைய மெதுவாக எழும்பிவரும் பிட்சை அளித்தாலும் மும்பை இந்தியன் அணிக்காரர்கள் அடித்தே ஆடினார்கள். 12 ஓவர்களில் 120 ரன்கள் என மிரட்டி இருந்தாலும் பிறகு நல்ல பந்துவீச்சால் 182 ரன்களையே ரோகித் சர்மாவின் அணி எடுத்தது.

182 என்பது நல்ல ஸ்கோர்தான். ஆனால் தாக்குப் பிடித்து ஆடினால், கொஞ்சம் பனி விழுந்தால் சமாளித்து எடுத்துவிடலாம் என்ற நம்பிக்கையில்தான் லக்னோ வீரர்கள்  உள்ளே நுழைந்தார்கள்.

எல்லாம் நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்தது. ஆகாஷ் மத்வால் பந்துவீச வரும்வரை. தொடக்க வீரர் மங்கட், ஆயுஷ் பதோனி, பூரன், ரவிஷ் பிஷ்னோய், மோசின் கான் என ஐந்து வீரர்களை ஐந்தே ரன்களைக் கொடுத்து வீழ்த்திவிட்டார் மத்வால். மற்றவர்கள் ரன் அவுட் ஆகியே 81 ரன்கள் வித்தியாசத்தில் மும்பையை அடுத்த சுற்றுக்கு அனுப்பி வைத்தனர்.

யார்யா இந்த மத்வால்?

உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி ஆகாஷ் மத்வால். டென்னிஸ் பந்துகளைக் கொண்டி வீசிக்கொண்டிருந்த இவர், சில ஆண்டுகளுக்கு முன் உத்தராகாண்ட் மாநில கிரிக்கெட் அணியில் சேர்க்கப்பட்டார்.

தந்தையை இழந்த பையன். குடும்ப நிதிநிலையும் அவ்வளவு சரியில்லை. இருந்தாலும் கிரிக்கெட்டே வாழ்க்கை என்று முடிவு செய்தார்.

பின்னர் இவரைக் கவனித்த மும்பை அணிக்காரர்கள், போன ஆண்டே கொண்டுவந்து  மும்பை அணிக்கு நெட் பவுலராக வைத்துக்கொண்டு பின் அணியிலும் சேர்த்துக்கொண்டார்கள். ஆனால் வாய்ப்பு வழங்கவில்லை. இந்த ஐபிஎல்லிலும் முதல் ஐந்தாறு ஆட்டங்களில் இவருக்கு வாய்ப்பில்லை. எல்லாம் சொதப்பியதாலும் முக்கிய பந்துவீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சரின் காயம் காரணமாகவும் உள்ளே வந்தவர் போட்ட போடில் தொடர்ந்து ஏழு போட்டிகளில் விளையாடி ரோகித்தின் நம்பிக்கையைப் பெற்றுவிட்டார். குறிபார்த்து யார்க்கர்கள், ஸ்விங் பந்துகள் வீசுவதில் சிறப்பாக இருக்கிறார்.

கிட்டத்தட்ட பும்ரா இல்லாத குறையைப் போக்கிவிட்டார் என்றே சொல்லலாம்.

அடுத்த போட்டி குஜராத் டைட்டன்ஸுடன். அவர்கள் மத்வால் பந்துவீச்சை எப்படி சமாளிப்பது என்றுதான் பயிற்சி எடுத்துக்கொண்டிருப்பார்கள். மும்பை பைனலுக்கு வருமா? இல்லை சிஎஸ்கேவுக்கு திரும்பவும் குஜராத் சோதனைதானா? பொறுத்திருந்து பார்ப்போம்!

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com