ஹனுமா விஹாரி
ஹனுமா விஹாரி

இந்திய கிரிக்கெட் வீரருக்கு அவமானம்! அரசியல்வாதி மீது கொதிக்கும் கிரிக்கெட் ரசிகர்கள்!

’மகனுக்காக என்னை பதவியிலிருந்து விலகச் சொன்னார்கள்’- ஹனுமா விஹாரி

“ஆந்திர கிரிக்கெட் அணிக்காக இனி விளையாடமாட்டேன்” என இந்திய கிரிக்கெட் வீரர் ஹனுமா விஹாரி அறிவித்ததை தொடர்ந்து, ஆந்திர கிரிக்கெட் வாரியம் விசாரணையைத் தொடங்கியுள்ளது.

ஹனுமா விஹாரி ஆந்திராவைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர். இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டு டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக ஆடியவர். தற்போது அவர் இந்திய அணியில் இடம் பெறவில்லை. ஆந்திர மாநிலத்துக்காக ரஞ்சிக் கோப்பை போட்டிகளில் ஆடிவருகிறார்.

நடப்பு ரஞ்சி கோப்பை தொடரில் ஆந்திர அணியின் கேப்டனான நியமிக்கப்பட்ட ஹனுமா விஹாரி, முதல் போட்டிக்கு பிறகு கேப்டன் பொறுப்பிலிருந்து தனிப்பட்ட காரணங்களுக்காக விலகுவதாகக் குறிப்பிட்டு பதவி விலகிவிட்டார்.

இருப்பினும் அணி சிறப்பாக ஆடி காலிறுதிக்குத் தகுதி பெற்றது. காலிறுதிப் போட்டியில் மத்தியப் பிரதேச அணிக்கு எதிரான போட்டியில் ஆந்திரா அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

இதைத் தொடர்ந்து, ஹனுமா விஹாரி நேற்று எக்ஸ் வலதளத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் “சில உண்மையை சொல்ல வேண்டியுள்ள காரணத்துக்காக நான் இந்த பதிவை பதிவிட்டுள்ளேன். நடப்பு சீசனில் வங்காள அணிக்கு எதிரான முதல் போட்டியில் நான்தான் ஆந்திராவின் கேப்டன். அப்போது அணியின் 17-வது வீரரிடம் நான் சத்தம் போட்டேன். அவரது தந்தை அரசியல் பிரமுகர். இந்த விவகாரம் குறித்து அந்த வீரர் அவரது தந்தையின் பார்வைக்கு கொண்டு சென்றுள்ளார். உடனடியாக அந்த அரசியல் பிரமுகரும் என் மீது நடவடிக்கை எடுக்குமாறு ஆந்திர கிரிக்கெட் சங்கத்திடம் கேட்டுக் கொண்டார்.

வங்காள அணிக்கு எதிராக நாங்கள் வெற்றி பெற்ற நிலையில், என் மீது தவறு ஏதும் இல்லாத சூழலில் கேப்டன் பொறுப்பில் இருந்து விலக வைக்கப்பட்டேன். தனிப்பட்ட முறையில் நான் அந்த வீரரை எதுவும் சொல்லவில்லை.” என அந்த பதிவில் தெரிவித்திருந்தார்.

அந்த வீரர் யார் என்பதை விஹாரி தெரிவிக்காத நிலையில், ஆந்திர அணியை சேர்ந்த பிருத்விராஜ் எனும் வீரர், ‘அது நான்தான்’ என தெரிவித்துள்ளார். ’இந்த பதிவின் மூலம் அனுதாபம் ஈட்ட முயற்சிக்கிறார். அன்றைய தினம் என்ன நடந்தது என்பதை அணி வீரர்கள் அனைவரும் அறிவார்கள். எனக்கு சுயமரியாதைதான் முக்கியம்’ என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையிலேயே, ஆந்திர கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் விஹாரி மீது பழி சுமத்தி உள்ளது.

‘ஹனுமா விஹாரி அணி வீரர்களிடம் தவறான முறையில் பேசுவதாக புகார்கள் வந்துள்ளன. அவர் வேறு மாநில அணிக்கு விளையாடப் போவதாக ஏற்கெனவே கேட்டிருந்தார். இருப்பினும் அவர் தொடர்ந்து விளையாட விரும்பியதால் அனுமதித்தோம். இந்த விவகாரம் குறித்து விசாரணை நடக்கிறது’ என்று அந்த அறிக்கை கூறுகிறது.

இதற்கிடையில் ஹனுமா விஹாரி மீது குற்றம் இல்லை. இதுபோல் சக வீரரைத் திட்டுவது கிரிக்கெட் அணியில் நன்கு விளையாட ஊக்குவிப்பதற்காக சகஜமாக நடப்பதுதான். இதை அந்த குறிப்பிட்ட வீரர் தவறாக எடுத்துக்கொண்டார். விஹாரியே கேப்டனாக நீடிக்கவேண்டும் என அனைத்து ஆந்திர அணி வீரர்களும் கையெழுத்துப் போட்ட கடிதம் ஒன்றையும் விஹாரி வெளியிட்டுள்ளார்.

தெலுங்கு கிரிக்கெட் உலகம் இந்த சர்ச்சையால் கொதித்துப் போய் உள்ளது. கிரிக்கெட் ரசிகர்கள் இது பற்றிக் கண்டனம் தெரிவித்துவருகிறார்கள்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com