வீராட் கோலி
வீராட் கோலி

ஆசியக் கோப்பை: பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணி இமாலய வெற்றி!

ஆசியக் கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியா அணி 228 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

16-வது ஆசியக் கோப்பை கிரிக்கெட்டில் தற்போது சூப்பர்4 சுற்று ஆட்டங்கள் இலங்கை தலைநகர் கொழும்பில் நடந்து வருகிறது.

சூப்பர்4 சுற்றின் 3-வது ஆட்டத்தில் இந்தியாவும், பாகிஸ்தானும் நேற்று முன்தினம் மோதின. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மாவும், சுப்மன் கில்லும் களம் இறங்கினர். பொறுப்புடன் ஆடிய இந்த ஜோடி 100 ரன்கள் குவித்து நல்ல தொடக்கத்தை அமைத்துக் கொடுத்தது. ரோகித் சர்மா 56 ரன்னும் சுப்மன் கில் 58 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

அடுத்து வந்த விராட் கோலி, கே.எல். ராகுல் ஜோடி நிலைத்து நின்று ஆடியது. இடையில் மழை காரணமாக போட்டி நிறுத்தப்பட்டு, பிறகு நேற்று மதியம் தொடங்கியது.

அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி, கே.எல். ராகுல் ஜோடி சதம் அடித்து அசத்தியது. இதன் காரணமாக இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 356 ரன்களை குவித்தது.

இந்திய அணி சார்பில் விராட் கோலி 122 ரன்களையும், கே.எல். ராகுல் 111 ரன்களையும் குவித்து ஆட்டமிழக்காமல் களத்திலிருந்தனர். பாகிஸ்தான் தரப்பில் ஷகீன் அஃப்ரிடி மற்றும் ஷதாப் கான் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

இதையடுத்து, 357 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி விளையாட தொடங்கியது.

இதில், பக்கார் ஜமான் 27 ரன்கள், அகா சல்மான், இஃப்திகார் அகமது ஆகியோர் தலா 23 ரன்களும், பாபர் அசாம் 10 ரன்களும், இமாம் உல் ஹாக் 9 ரன்களும், அஃப்ரிதி 7 ரன்களும், ஷாதாப் கான் 6 ரன்களும், ஃபஹீம் அஷ்ரப் 4 ரன்களும், முகமது ரிஸ்வான் 2 ரன்களும் எடுத்தனர்.

பாகிஸ்தான் வீரர்கள் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால், பாகிஸ்தான் அணி 32 ஓவர்களில் 128 ரன்கள் மட்டுமே எடுத்து சுருண்டது.

இந்தப் போட்டியில் வீராட் கோலி 99 ரன்களை எட்டியபோது, ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 13 ஆயிரம் ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.

சூப்பர் 4 சுற்றில் முதல் வெற்றியைப் பெற்றுள்ள இந்தியா, இன்று மாலை இங்கை அணியுடன் மோதுகிறது.

logo
Andhimazhai
www.andhimazhai.com