நீங்க கப் கொடுத்தா நாங்க வாங்க மாட்டோம்! முறுக்கிக் கொண்ட இந்திய அணி!

வெற்றியை கொண்டாடும் இந்திய வீரர்கள்
வெற்றியை கொண்டாடும் இந்திய வீரர்கள்
Published on

மஞ்சுரேக்கர்: இந்த ஒட்டு மொத்த ஆசியக்கோப்பை போட்டிகளில் எத்தனை பந்துகளை நீங்க ஆடினீங்க?

ரிங்கு சிங் (படு குஷியாக) : ஒரே ஒரு பந்துதான். அதையும் தூக்கி நாலுக்கு அடிச்சுட்டேன். போட்டியை வென்றாகிவிட்டது. எல்லாரும் என்னை பினிஷர்னு சொல்றாங்க. வாய்ப்பு கிடைச்சப்ப பயன்படுத்திட வேண்டியதுதான்.

-ஹர்திக் பாண்டியா காயம் காரணமாக விலக, இறுதிப்போட்டியில் ஆட வாய்ப்புக் கிடைத்த ரிங்கு சிங்கிடம் போட்டி முடிந்ததும் மஞ்சுரேக்கர் பேசியதில் இருந்து.

41 ஆண்டு கால ஆசிய கோப்பை வரலாற்றில் முதல்முறையாக இந்தியா - பாகிஸ்தான் பைனல். இந்தியா கோப்பையை வென்றுள்ளது. இது ஒன்பதாவது முறையாக இந்தியாவுக்குக் கிடைக்கும் ஆசியக் கோப்பை.

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டம் துபாயில் நேற்று இரவு நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய பகார் ஜமான் மற்றும் பர்கார் இணைந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

குறிப்பாக, சிறப்பாக விளையாடிய பர்கான் அரைசதமடித்து அசத்தினார். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 84 ரன்கள் சேர்த்த நிலையில் பிரிந்தது. பர்கான் 57 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த சைம் அயூப் 14 ரன்களில் ஆட்டமிழந்தார். பகார் ஜமானும் 46 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர். ஒரு கட்டத்தில் 12 ஓவர்களில் 114-2 என வலுவான நிலையில் இருந்த பாகிஸ்தான் அணி, அடுத்த 5 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து திணறியது.

இறுதியில் பாகிஸ்தான் அணி 19.1 ஓவர்கள் முடிவில் 146 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதையடுத்து 147 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது.

தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய அபிஷேக் ஷர்மா 5 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். இதையடுத்து களமிறங்கிய கேப்டன் சூர்யகுமார் யாதவும் ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான சுப்மன் கில்லும் நீண்ட நேரம் நிலைக்கவில்லை. அவர் வெறும் 12 ரன்களில் அவுட்டானார். பாகிஸ்தான் அணி வெல்ல வேண்டும் என்றால் அபிஷேக் சர்மாவை ஆரம்பத்திலேயே அவுட் ஆக்கவேண்டும் என்று நிபுணர்கள் கூறிவந்தனர். அதன்படி நடந்ததும் பாகிஸ்தானின் கை ஓங்கியதாகத் தோன்றியது.

ஆனால் போர் கண்ட சிங்கமாக தொடர்ந்து வந்த திலக் வர்மாவும், சஞ்சு சாம்சனும் ஜோடி சேர்ந்து அணியை சரிவிலிருந்து மீட்டனர். இவர்களில் சஞ்சு சாம்சன் 24 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். சிறப்பாக விளையாடிய திலக் வர்மா அரை சதம் அடித்தார். அவருக்கு சிஎஸ்கேயின் சிக்சர் மன்னன் சிவம் துபே பக்கபலமாக இருந்து 33 ரன்கள் எடுத்தார். கடைசி வரை களத்தில் இருந்த திலக் வர்மா 69 ரன்கள் எடுத்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.

இறுதியில் இந்திய அணி 19.4 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 150 ரன்கள் எடுத்து இலக்கை கடந்தது. இதன் மூலம் இந்திய அணி பாகிஸ்தான் அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

ஏன் இந்தியா கோப்பையை வாங்க மறுத்தது?

இறுதி ஆட்டத்தில் இந்தியா வென்றாலும் கோப்பையும் மெடலும் வழங்கப்படாதது மீண்டும் ஒரு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைமைப் பொறுப்பில் இருப்பவர் மொஷின் நக்வி. இவர் தற்போது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவராகவும் அரசில் அமைச்சராகவும் இருக்கிறார்.

வெற்றிபெறும் அணிக்கு ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவரான மொஷின் நக்விதான் வெற்றிக் கோப்பையை வழங்குவதாக இருந்தது. ஆனால், இந்திய அணி நிர்வாகம், ஆசிய கோப்பை மற்றும் வீரர்களுக்கு அணிவிக்கப்படும் மெடல்களை மொஷின் நக்வியிடம் பெற்றுக்கொள்ள விருப்பமில்லை என்று தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, உள்ளூர் நேரப்படி ஆட்டம் 10.30 மணிக்கே முடிவடைந்த போதும், நள்ளிரவு வரை பரிசளிப்பு நிகழ்ச்சி தாமதமானது.

தாமதமாக தொடங்கிய பரிசளிப்பு நிகழ்ச்சியில், பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அகா மட்டும் நக்வியிடம் இரண்டாமிடம் பிடித்த அணிக்கான காசோலையை பெற்றுக்கொண்டார்.

ஆட்ட நாயகன் விருதை வென்ற திலக் வர்மாவும் தொடர் நாயகன் விருதை வென்ற அபிஷேக் சர்மாவும் மேடையில் இருந்த பிற விருந்தினர்களிடம் பெற்றுக்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதன் பின்னர் கோப்பை இல்லாத நிலையில் அதைப் பிடித்துக்கொண்டிருப்பதாக இந்திய அணிவீரர்கள் போஸ் மட்டும் கொடுத்து திருப்திப் பட்டுக்கொண்டனர்.

நாடுகளுக்கு இடையிலான மோதல் கிரிக்கெட் ஆட்டக்களத்திலும் பிரதிபலிப்பது நல்லதல்ல என கிரிக்கெட் ரசிகர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள். நேற்று நடந்த அருமையான ஆட்டத்தை இந்த சம்பவம் குலைத்துவிட்டது!

logo
Andhimazhai
www.andhimazhai.com