அஸ்வின் 500! தமிழனுக்குக் கிட்டாத கேப்டன் பதவி!

அஸ்வின் 500! தமிழனுக்குக் கிட்டாத கேப்டன் பதவி!

‘அஸ்வின் 500ஆவது விக்கெட் வீழ்த்தப்போறாரு.. அவர் படம் வெச்சு ஒரு கார்டு ரெடி பண்ணி வையுங்கள். அந்திமழை சமூக ஊடகப் பக்கத்தில் போட்ரலாம்'.

தற்போது நடந்துகொண்டிருக்கும் இந்திய இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியின் கடைசி நாளில் அலுவலகத் தில் வடிவமைப்பாளரிடம் சொல்லி வைத்திருந்தோம். ஆனால் அஸ்வின் 499 -  மட்டுமே வீழ்த்தியிருந்த நிலையில் அந்த டெஸ்ட் முடிந்துவிட்டது. அந்த ஒருவிக்கெட் அவருக்குக் கிட்டவில்லை. சில நாட்கள் கழித்து ராஜ்கோட்டில் மூன்றாவது டெஸ்ட்டில் அஸ்வின் தன் 500வது விக்கெட்டை வீழ்த்தியபோது அந்த கார்டை பதிவேற்ற முடிந்தது. கிரிக்கெட் என்ற விளையாட்டில் எதிர்பார்ப்புகள் எல்லாம் எந்நேரமும் நடப்பதில்லையே...

இந்திய கிரிக்கெட்டில் அனில்கும்ப்ளேயும் ஹர்பஜனும் ஒதுங்கிய நேரத்தில் உருவான சுழற்பந்து இடைவெளியைக் கச்சிதமாக நிரப்பியவர் அஸ்வின் ரவிச்சந்திரன். உலகில் 500 விக்கெட்டுகளுக்கு மேல் அதிகமாக எடுத்த ஒன்பது வீரர்களில் ஒருவர். இந்தியாவைப் பொறுத்தவரை இரண்டாவது வீரர். முதலிடத்தில் இருக்கும் அனில் கும்ப்ளே இடச் சுழலர். அஸ்வின் வலச் சுழலர்.

நடுவிரலால் சுழற்றும் ‘சொடுக்கு பந்து' எனப்படும் கேரம் பால் அவரது முக்கிய ஆயுதம். அஸ்வினைப் பார்த்து பல சுழலர்களும் இப்போது பல்வேறு மாறுதலான பந்துவீச்சுகளில் கவனம் செலுத்து கிறார்கள். பிற சுழலர்களிடம் இருந்து அஸ்வினைப் பிரித்துக் காட்டுவது அவர் டெஸ்டுகளில் அடித் திருக்கும் ஐந்து சதங்கள். ஆரம்பத்தில் தொடக்க ஆட்டக்காரராக ஆடத் தொடங்கி, பின்னர் வேகப்பந்து போட்டு, பிறகு சுழல் பந்துக்கு வந்தவர்தான் இந்த மாம்பலத்து கிரிக்கெட் வீரர்!

மிகக்கடுமையாகப் போராட்டக் குணம் தனக்கு உண்டு என்பதை 2021 ஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்தின் போது, ஹனுமா விஹாரியுடன் சேர்ந்து போராடி ஒரு டெஸ்டை அவர் டிரா செய்து கொடுத்த சம்பவம் நிரூபித்தது. அந்த தொடரில் முதல் டெஸ்டில் மிகக் கேவலமாக இந்திய அணி தோற்றது. அடுத்த டெஸ்டுக்கு தலைமையேற்க கோலி இல்லை. ஊருக்குத் திரும்பிவிட்டார். ரஹானே தலைமையில் ஓர் இளம் அணி ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது. இரண்டாவது டெஸ்டில் இந்தியா வெற்றி. மூன்றாவது டெஸ்டின் நான்காவது இன்னிங்க்ஸில் 407 ரன்கள் எடுக்கவேண்டும்.

அஸ்வின், ஹனுமா விஹாரியுடன் சேர்ந்து தூண்போல் நின்றார். விஹாரிக்கு காலில் தசை கிழிந்திருந்தது. அஸ்வினுக்கு இடுப்புப் பிடிப்பு. அன்று காலையில் எழவே முடியவில்லை. இருந்தாலும் அன்று நாள் முழுக்க இருவரும் சேர்ந்து ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர்களை எதிர்கொண்டது மிகச்சிறந்த சம்பவமாக கிரிக்கெட் வரலாற்றில் பதிவானது. 259 பந்துகளை எதிர்கொண்டார்கள். இந்தியா அந்த ஆட்டத்தை சமன் செய்ததுடன் அந்தத் தொடரையும் வென்று வரலாறு படைத்தது.

உடல் பலத்தைவிட ஆட்டக்காரரை அலசி ஆராய்ந்து விளையாடும் நுட்பத்தை நம்புகிறவர் அஸ்வின். ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவன் ஸ்மித்தை ஆட்டமிழக் கச் செய்வதற்காக ஆறுமாதங்களாக அவர் ஆடிய ஆட்டங்களையே தொடர்ந்து போட்டுப் பார்த்து தயாரித்ததாக அவர் பேட்டி ஒன்றில் குறிப்பிட்டிருந்தார்.

அஸ்வினுக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக விளையாட்டால் உருவாகும் காயங்களும் ஏற்பட்டிருந்தன. முழங்கால் மூட்டு தசைநார்களில் பிரச்னை, வயிற்றுத் தசை கிழிவு போன்ற பிரச்னைகளை எதிர்கொண்டார். இவரது பிரச்னைகள் புரிந்துகொள்ளப்படாத நிலையில் ஆட்டத்தை விட்டு விலகிவிடலாமா என்றுகூட யோசித்ததாகக் குறிப்பிடுகிறார்.

உடல்பிரச்னைகளை எதிர்கொண்டு அவற்றுக்கு ஏற்ப தன் பந்துவீசும் திறனில் மாறுதல்களைக் கொண்டுவந்து மீண்டும் சாம்பியன் என நிரூபித்தாலும் இந்தியாவுக்கு வெளியே ஆடப்படும் ஆட்டங்களில் அவருக்கு வாய்ப்பளிக்கப்படாத விமர்சனங்களும் உண்டு.

அஸ்வினுக்கு இன்னொரு முகம் அவரது தடங்கலற்ற சமூக ஊடகச் செயல்பாடு. கலகலவென்று தன் யூட்யூப் சானலில் தமிழில் பேசி தன் அனுபவங்களைப் பகிரும்போது, அவருடன் நெருக்கமான உணர்வு ஏற்படுகிறது.

பொதுவானதொரு மனக்குறை உண்டு. அது இவ்வளவு ஆழமான கிரிக்கெட் அறிவும் திட்டமிடுதலும் கொண்ட இவருக்கு ஏன் கேப்டன் பதவி என்பது எட்டாக்கனியாகவே இருந்து வந்தது? மேலும் மேலும் இளம் வயது வீரர்களுக்கே இந்திய அணி நிர்வாகம் தலைவர் பதவிகளை வழங்கிவருகிறது. சில போட்டிகளுக்கு இரண்டாம் நிலை அணிகளை அனுப்பும்போதுகூட அஸ்வினின் பெயர் கேப்டன் பதவிக்குப் பரிசீலிக்கப்பட்டதில்லை!

100 டெஸ்ட் போட்டிகளை விரைவில் எட்ட இருக்கும் இந்த ‘போர்கண்ட சிங்கம்' இன்னும் பல சாதனைகளை முறியடித்து இந்திய அணிக்கு வெற்றிகள் குவிக்கட்டும்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com