முதல்வர் விஜய்யுடன் செஸ் ஆடிய பிரக்ஞானந்தா!
நார்வே செஸ் போட்டியில் வெற்றிபெற்று சென்னை திரும்பிய கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா முதல்வர் விஜய்யை இன்று சந்தித்து வாழ்த்து பெற்றார்.
இவர் முன்னணி வீரரான மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை இந்தத் தொடரில் வீழ்த்தியுள்ளார். இறுதிப் போட்டியில் ஜெர்மனி வீரர் வின்சென்ட் கீமரை வீழ்த்தி நார்வே செஸ் தொடரை வென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளார்.
சென்னை தலைமைச்செயலகத்தில் முதல்வர் விஜய்யை இன்று காலையில் சந்தித்து வாழ்த்து பெற்றபோது, அவருடன் இணைந்து பிரக்ஞானந்தா செஸ் விளையாடினார். நார்வே செஸ் தொடரில் வெற்றிப்பெற்று தமிழகத்திற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்த்துள்ளதாக பாராட்டிய முதல்வர், ஊக்கத்தொகையும் வழங்கியுள்ளார்.
பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த பிரக்ஞானந்தா,"முதல்வர் விஜய் என்னுடன் செஸ் விளையாடுவார் என்று நான் எதிர்பார்க்கவில்லை. அவருடன் விளையாடியது மகிழ்ச்சியாக இருந்தது. அந்த விளையாட்டில் நான் வெற்றி பெற்றேன். ஆனால், முதல்வர் விஜய் நன்றாக விளையாடினார். அவர் இவ்வளவு நன்றாக விளையாடுவார் என்று எனக்குத் தெரியாது." என்று கூறினார்.
