வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் ஆர்.சி.பி. வீரர்கள்
வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் ஆர்.சி.பி. வீரர்கள்

ப்ளே ஆப் வாய்ப்பை நழுவவிட்ட சி.எஸ்.கே.! – தோனிக்கு தண்ணி காட்டிய யஷ் தயாள்!

நேற்றைய சி.எஸ்.கே. – ஆ.ர்.சி.பி அணிக்கு இடையேயான போட்டியின் கடைசி நிமிடங்கள் யாருக்கு திக்திக்கென்று இருந்ததோ இல்லையோ, யஷ் தயாளுக்கு நிச்சயம் இருந்திருக்கும்.

கடந்த ஐபிஎல் தொடரில் யஷ் தயாள் குஜராத் அணிக்காக விளையாடிய போது, கேகே ஆர் அணியுடன் நடந்த ஒரு லீக் போட்டியில் கடைசி ஓவரை வீசினார். அந்த ஓவரில் கேகேஆர் அணியின் ரிங்கு சிங், கடைசி 5 பந்துகளில் 5 சிக்சர்களை விளாசி யஷ் தயாளை கலங்கடித்தார். சமூக ஊடகங்களில் யஷ் தயாளை வறுத்தெடுக்க, அவரின் கிரிக்கெட் வாழ்க்கையே முடிவுக்கு வந்ததாக பார்க்கப்பட்டது.

ஆனால், யஷ் தயாளை இந்த சீசனில் ஆர்.சி.பி. அணி விலைக்கு வாங்கியதோடு, அவருக்கு தொடக்கம் முதலே பிளேயிங் லெவனில் வாய்ப்பு வழங்கப்பட்டது.

நேற்று மாலை நடைபெற்ற சிஎஸ்கே - ஆர்சிபி அணிக்கு இடையேயான போட்டியில் பெங்களூரு அணி முதலில், பேட்டிங் செய்து 218 ரன்கள் எடுத்த நிலையில், சிஎஸ்கே அணி 201 ரன்கள் எடுத்தாலே பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி விடலாம் என்ற நிலை இருந்தது. இதனால் போட்டியின் கடைசி நிமிடங்கள் பரபரப்பு தொற்றிக் கொண்டது.

கடைசி ஓவரில் சிஸ்கே-வுக்கு 35 ரன்கள் தேவைப்பட்டது. இதில் 17 ரன்கள் எடுத்தால் சிஎஸ்கே அணிக்கு பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும், பெங்களூரு அணி பிளே ஆஃப் வாய்ப்பை இழக்கும் என்ற இக்கட்டான. அப்போது தோனி களத்தில் இருக்க, யாஷ் தயாள் பதற்றத்துடன் கடைசி ஓவரின் முதல் பந்தை வீசினார். தோனி 110 மீட்டருக்கு சிக்ஸர் அடித்து எதிரணிக்கு புளியைக் கரைத்தார். அடுத்த பந்தையும் தோனி இடப்பக்கம் தூக்கி அடிக்க, சென்னை ரசிகர்களுக்கு இடியாய் வந்து விழுந்தது தோனியின் கேட்ச்.

யஷ் தயாள்
யஷ் தயாள்

கொஞ்சம் பெருமூச்சுவிட்டு, அடுத்தடுத்து பந்துகளை வீசத் தொடங்கிய தயாள், 4 பந்துகளில் ஒரு ரன் மட்டுமே விட்டுக் கொடுத்தார். இதன் மூலம் ஆர்சிபி அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதோடு, பிளே ஆஃப் சுற்றுக்கும் முன்னேறி அசத்தியது.

கடைசி ஓவர் வீசியது குறித்து யாஷ் தயாள் கூறுகையில், "நான் இந்த போட்டியின் மிக முக்கியமான ஓவரை வீசினேன். அதுவும் கடைசி ஓவர். தோனியின் விக்கெட்தான் இந்த போட்டியின் திருப்புமுனை. முதல் பந்தில் அவர் சிக்ஸ் அடித்தபோது நான் மனதளவில் மோசமான நிலைக்கு சென்றேன் (ரிங்கு சிங் 5 சிக்ஸர்கள் அடித்த சம்பவத்தை குறிப்பிட்டார்). ஆனால், எனக்கு நானே ஒரு விஷயத்தை சொல்லிக் கொண்டேன். நன்றாக பந்து வீசவேண்டும் என. ஸ்கோர் போர்டை பார்ப்பதை விட நல்ல பந்துகளை வீசுவதில் கவனம் செலுத்தினேன்" என்றார் யாஷ் தயாள்.

கடந்த ஐபிஎல் தொடரில் கடுமையாக விமர்சிக்கப்பட்ட யாஷ் தயாள், தற்போது வாழ்த்து மழையில் நனைந்துக் கொண்டிருப்பதோடு, தோனிக்கு தண்ணி காட்டிய வீரர் என்றும் அறியப்படுவார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com