வெற்றிக்குப் பின் ஜடேஜா
வெற்றிக்குப் பின் ஜடேஜா

ஐந்தாவது முறை கோப்பையைத் தட்டித் தூக்கிய சிஎஸ்கே! கடைசி இரண்டு பந்தில் ஜெயித்துக் கொடுத்த ஜட்டு!

கடைசி இரண்டு பந்து… பத்து ரன்கள் அடிக்கவேண்டும்! குஜராத் அணியின் மிகச் சிறந்த பந்துவீச்சாளர் மொஹித் சர்மா தொடர்ந்து யார்க்கராகப் போட்டு திணற அடிக்கிறார்! சிக்ஸர் அடிப்பதற்காக வளர்த்து வைத்திருக்கும் சிவம் துபேவுக்கு மாட்டவே இல்லை! கடைசி இரண்டு பந்து ஜடேஜா எதிர்கொள்கிறார்! குஜராத் வீரர்கள் முகத்தில் மகிழ்ச்சி.. எப்படியும் வென்றுவிடுவோம் என நினைக்கிறார்கள்.

அந்த ஓவரின் ஐந்தாவது பந்து… லேசாக குறி தவறுகிறது. தூக்கி அடிக்கிறார் ஜடேஜா சிக்ஸர்! அடுத்த பந்து…. நான்கு வேண்டும்! சற்று தவறும் பந்தை அவரது வலதுபக்கம் தட்ட, ஷார்ட் பைன் லெக் திசையில் நான்கு!....

சிஎஸ்கே ஐந்தாவது முறையாக கோப்பையை வென்றுவிட்டது!

பல விதங்களில் இது சிஎஸ்கே ரசிகர்களுக்கு முக்கியமான வெற்றி! தல தோனி அடுத்த சீசனுக்கு ஆடுவாரா தெரியாது. தூண் மாதிரி இருந்த பாகுபலி அம்பட்டி ராயுடு தன் கடைசி ஆட்டம் இந்த ஆட்டமே என்று அறிவித்துவிட்டார்!

அகமதபாத்தில் முதல் நாள் மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்ட நிலையில் 29 இரவு மீண்டும் நடந்த ஆட்டத்தில் சிஎஸ்கேதான் டாஸ் வென்றது. தோனி, மழை வரும் வாய்ப்பு உள்ளது எனவே இதை யோசித்து நாங்கள் பந்துவீச்சை தேர்வு செய்கிறோம் என்றார்.

ஆனால் அந்த முடிவு தவறோ என்று நினைக்கும் அளவுக்கு குஜராத் வீரர்கள் ஆடினார்கள். கில் ஆரம்பத்திலேயே அவுட் ஆனாலும் தமிழக வீரர் சாய் சுதர்சன், மிக அற்புதமாக ஆடினார். 47 பந்துகளில் 96 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். சதம் போட்டிருக்கலாம்!  நான்கு விக்கெட் இழப்புக்கு 214 ரன்கள் எடுத்தது குஜராத் அணி.

கஷ்டமான ஸ்கோரை எதிர்கொண்டு ஆட்டத்தைத் தொடங்க சிஎஸ்கே முயன்றபோது முதல் ஓவரிலேயே மழை வந்துவிட்டது. அதனால் இரண்டு மணி நேரம் ஆட்டம் பாதிக்கப்பட்டு 12 மணிக்கு மேல்தான் ஆட்டம் தொடங்கிற்று! ஓவர்கள் 15 ஆக குறைக்கப்பட்டு 172 ரன்கள் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டது!.

ருத்துராஜும் கான்வேயும் நல்ல தொடக்கத்தை தந்தனர். சுமார் ஏழு ஓவர் ஆகும்போது இருவரும் அவுட் ஆகி இருந்தனர். உள்ளே சிவம் துபே வந்தார். அவருக்கு ஆரம்பத்தில் பந்து பேட்டில் படவில்லை. ஆனால் ரகானே அருமையாக ஆடி சிக்சர் போர்களை பறக்கவிட்டு ரன் விகிதம் குறையாமல் பார்த்துக்கொண்டார். 27 ரன்களில் இவரும் அவுட் ஆக,  அடுத்து உள்ளே  வந்தவர் நம் பாகுபலி ராயுடு. அவருக்கு கடைசி ஆட்டம். ஆனால் அடித்து ஆட கஷ்டமான பவுலரான மொகித் சர்மாவை துவைத்தார் ராயுடு. இவர் அடித்துக் கொடுத்த ரன்கள் மிக முக்கியம். 8 பந்துகளில் 19 ரன்கள் எடுத்து அவுட் ஆக, உள்ளே வந்தார் தோனி. ஆனால் வந்த முதல் பந்திலேயே அவுட் ஆக, மைதானமே கண்ணை மூடிக்கொண்டது!

இப்போது ராக்ஸ்டார் ஜடேஜாவின் தருணம்! ஆனாலும் சிவம் துபே இதற்கிடையில் இரண்டு சிக்ஸர் விட்டு டென்ஷன் குறைத்தார்.

ஆக கடைசி ஓவரில் 13 ரன்கள் தேவைப்பட்டன. மொகித் சர்மா தொடர்ந்து 4 பந்துகள் யார்க்கர் போட, சிஎஸ்கே ரசிகர்களின் இதயங்கள் மிக வேகமாக துடித்தன. கடைசி இரண்டு பந்தில் நிகழ்ந்தது ஒரு சரித்திரம்!

சிஎஸ்கே வீரர்கள் உள்ளே ஓட, ஜடேஜா தாவிக் குதித்து ஓடிவர, தோனி ஜட்டுவைத் தூக்கிக் கொண்டாடிய காட்சி மிக மிக அழகாக இருந்தது!

 ஆட்டம் முடியும்போது அதிகாலை 1.35 ஆகி இருந்தது. சந்தோசமான ஒரு காலையைக் கொண்டாட சிஎஸ்கே ரசிகர்கள் தயாராகி விட்டனர். இந்த கடினமான ஆனால் இனிப்பான கடைசி பந்து வெற்றி அடுத்த ஐபிஎல் வரைக்கும் தாங்கும்!

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com