அனைத்து விதமான கிரிக்கெட் போட்டியிலிருந்தும் ஓய்வை அறிவித்தார் பிராவோ!

Dwayne Bravo
டுவைன் பிராவோ
Published on

அனைத்து விதமான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக மேற்கிந்தியத் தீவுகள் அணியின் வீரர் டுவைன் பிராவோ அறிவித்துள்ள நிலையில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆலோசகராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஏற்கெனவே ஓய்வு பெற்ற நிலையில், மேஜர் லீக் கிரிக்கெட் மற்றும் கரீபியன் பிரீமியர் லீக் தொடர்களில் விளையாடி வந்தார். ஏற்கெனவே, ஐ.பி.எல். தொடரில் இருந்து ஓய்வு பெற்ற பிராவோ, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளராக உள்ளார்.

இந்த நிலையில், கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிக்காக நேற்று கடைசிப் போட்டியில் விளையாடிய நிலையில் பிராவோ ஓய்வை அறிவித்துள்ளார்.

ஓய்வு குறித்து இன்ஸ்டாகிரம் பக்கத்தில் பிராவோ பதிவிட்டதாவது:

“எனக்கு எல்லாவற்றையும் கொடுத்த விளையாட்டில் இருந்து இன்று நான் விடைபெறுகிறேன். ஐந்து வயதில் இருந்தே இதுதான் நான் விளையாட வேண்டியது. வேறு எதிலும் ஆர்வ இல்லை. என் வாழ்க்கை முழுவதும் உனக்காக அர்ப்பணித்தேன். பதிலுக்கு எனக்கும் என் குடும்பத்துக்கும் நான் கனவு கண்ட வாழ்க்கையை விளையாட்டு கொடுத்தது. அதற்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் ஈடாகாது.

கிரிக்கெட் வீரராக இருபத்தி ஒரு ஆண்டுகளில் பல உயர்வும், சில தாழ்வுகளும் நிறைந்த ஒரு நம்பமுடியாத பயணமாக இருந்தது. எனது மனதில் தொடர்ந்து விளையாட வேண்டும் எனத் தோன்றுகிறது, ஆனால், எனது உடலால் வலி, முறிவுகள் உள்ளிட்ட காயங்களை தாங்க முடியாது. இதன்காரணமாக, எனது அணி, எனது ரசிகர்களை வீழ்த்திவிடக் கூடிய நிலையில் என்னால் என்னை நிறுத்த முடியாது.

எனவே, கனத்த இதயத்துடன், விளையாட்டிலிருந்து ஓய்வு பெறுவதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறேன். இன்று, சாம்பியன் விடைபெறுகிறார்.

இந்த முடிவு கசப்பானதாக இருந்தாலும், எனக்கு எந்த வருத்தமும் இல்லை. இப்போது, எனது அடுத்த அத்தியாயத்தை எதிர்பார்க்கிறேன். மீண்டும் ஒருமுறை, நன்றி. விரைவில் சந்திப்போம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

டி20 கிரிக்கெட்டில் 600 விக்கெட்டுகள் எடுத்த முதல் பந்துவீச்சாளர் என்கிற பெருமையைப் பெற்றவர் 40 வயது மேற்கிந்தியத் தீவுகள் வீரர் பிராவோ.

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்காக 91 டி20 ஆட்டங்களில் 78 விக்கெட்டுகளும் ஐபிஎல் போட்டியில் 161 ஆட்டங்களில் 183 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார்.

ஐபிஎல் போட்டியில் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர் என்கிற பெருமையையும் பெற்றுள்ளார். தற்போது அவர் 2025 ஐபிஎல் தொடருக்கான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com