உலகக்கோப்பை கால்பந்துப் போட்டியின் அரையிறுதி போட்டிகள் நடைபெற்று வருகின்றன. நேற்று நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியனான அர்ஜெண்டினா அணி, முன்னாள் சாம்பியனான இங்கிலாந்து அணியுடன் மோதியது.
பரபரப்பாக நடைபெற்ற போட்டியின் முதல் பாதி போட்டியில், இரு அணிகளும் ஒரு கோல் கூட அடிக்கவில்லை.
போட்டியின் இரண்டாம் பாதி ஆட்டத்தில் இங்கிலாந்து அணியின் வீரர் கார்டன் முதல் கோல் அடித்தார். இதனால் இங்கிலாந்து அணி முன்னிலையில் இருந்தது.
பின்னர் தனது அதிரடி ஆட்டத்துடன் களமிறங்கிய அர்ஜெண்டினா அணியின் வீரர்கள் என்சோ பெர்னாண்டஸ், லடாரோ மார்டினஸ் அடுத்தடுத்து இரண்டு கோல்கள் அடித்து அர்ஜெண்டினாவை முன்னிலைக்கு கொண்டு வந்தனர். இந்த இரண்டு கோல்களுமே மெஸ்ஸி அளித்த பிரமாதமான பாஸ்களின் மூலம் அடிக்கப்பட்டன.
இதனால் 2 - 1 என்ற புள்ளிக்கணக்கில் அர்ஜெண்டினா அணி போட்டியை வென்று, இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
மேலும், உலகக்கோப்பை வரலாற்றில் முதன்முறையாக மூன்று முறை களமிறங்கிய வீரர் என்ற சாதனையை மெஸ்ஸி படைக்கவுள்ளார்.
கடந்த 2014, 2022 ஆண்டுகளின் உலகக்கோப்பைப் போட்டியில் களமிறங்கிய மெஸ்ஸி, நடப்பு ஆண்டில் மூன்றாவது முறையாக விளையாட உள்ளார்.
உலகக்கோப்பை போட்டியில் அதிக கோல் அடித்த வீரர்களில் முதலிடத்தையும், கோலுக்கு அதிகம் அஸிஸ்ட் செய்வதில் இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளார் மெஸ்ஸி.