இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஹர்மன்பிரீத் கெளரின் ஆளுயர மெழுகு சிலை உருவாக்கப்பட்டுள்ளது.
இராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், ஹர்மன்பிரீத் கெளரின் ஆளுயர மெழுகு சிலையை அவரே திறந்து வைத்தார்.
ஜெய்ப்பூரின் நஹர்கர் கோட்டையில் அமைந்துள்ள ஜெய்ப்பூர் மெழுகு அருங்காட்சியகம் என்று அழைக்கப்படும் ஹிஸ்டோரிகா மெழுகு அருங்காட்சியகத்தில் இந்தச் சிலை பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்படவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த 2025ஆம் ஆண்டு நடைபெற்ற மகளிர் ஒருநாள் உலகக்கோப்பையில் இந்திய அணி முதல்முறையாக வெற்றி பெற வழிநடத்தியதைப் பாராட்டி இந்த மெழுகுச் சிலை நிறுவப்பட்டுள்ளது.
இந்த அருங்காட்சியகத்தில் ஏற்கெனவே சச்சின் டெண்டுல்கர், எம்.எஸ். தோனி, விராட் கோலி ஆகிய கிரிக்கெட் வீரர்களின் மெழுகுச் சிலைகள் உள்ளன. இவர்களின் சிலைகளுக்கு அருகில் ஹர்மன்பிரீத் கெளரின் சிலையும் இடம்பெறவுள்ளது.
இதன் மூலம் உலகிலேயே ஆளுயர மெழுகு சிலை நிறுவப்பட்ட முதல் பெண் கிரிக்கெட் வீரர் எனும் பெருமையை ஹர்மன்பிரீத் கெளர் பெற்றுள்ளார்.
முன்னதாக, இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்த ஹர்மன்பிரீத் கெளர், அனைத்து விதமான போட்டிகளுக்கான கேப்டன் பொறுப்பிலிருந்தும் விலகுவதாக கடந்த அக்டோபர் மாதத்தின் தொடக்கத்தில் அறிவித்திருந்தார்.
இதைதொடர்ந்து, இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் புதிய கேப்டனாக ஸ்மிருதி மந்தனா நியமிக்கப்பட்டார்.