சுப்மன் கில்
சுப்மன் கில்

ஐசிசி தரவரிசை: முதல் 10 இடங்களில் 3 இந்திய வீரர்கள்!

சர்வதேச ஒருநாள் போட்டியில் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் சுப்மன் கில் இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

ஒருநாள் போட்டி பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) இன்று வெளியிட்டுள்ளது. அதில், இந்திய வீரர்கள் 3 பேர் முதல் பத்து இடங்களுக்குள் வந்துள்ளனர்.

ஒருநாள் போட்டிகளின் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் முதலிடத்தில் தொடருகிறார். இந்திய வீரர் சுப்மன் கில் 2ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார். தற்போது நடைபெற்றுவரும் ஆசியக் கோப்பை தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால் அவர் 2ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார். இந்த ஆண்டில் 16 போட்டிகளில் விளையாடியிருக்கும் சுப்மன் கில், 904 ரன் எடுத்துள்ளார். கடந்த ஜனவரி மாதம் சிறந்த வீரருக்கான ஐசிசி விருதையும் இவர் பெற்றார்.

மேலும் இந்திய வீரர் விராட் கோலி 8-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். சமீபத்தில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் விராட் கோலி சதமடித்தார்.

தற்போதைய ஆசியக் கோப்பை தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் இன்னொருவரான இந்திய கேப்டன் ரோகித் சர்மா 9ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

ஐ.சி.சி. தரவரிசைப் பட்டியலில் 2018ஆம் ஆண்டிற்கு பிறகு முதல் பத்து இடங்களுக்குள் இந்திய வீரர்கள் 3 பேர் வந்திருக்கின்றனர்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com