இலங்கை கிரிக்கெட் வாரியம்
இலங்கை கிரிக்கெட் வாரியம்

ஐ.சி.சி. உறுப்பினர் பதவியில் இருந்து இலங்கை கிரிக்கெட் வாரியம் இடைநீக்கம்!

ஐ.சி.சி உறுப்பினர் பதவியிலிருந்து இலங்கை கிரிக்கெட் வாரியம் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளது. இலங்கை கிரிக்கெட் வாரியத்தில் அரசின் தலையீடு இருப்பதே இந்த இடைநீக்க நடவடிக்கைக்கு காரணம் என கூறப்பட்டுள்ளது.

கடந்த சில நாள்களுக்கு முன்னர் இலங்கை கிரிக்கெட் வாரியம் கலைக்கப்பட்டது. அணியின் நிர்வாகப் பணிகளை கவனிக்க ஏழு பேர் அடங்கிய இடைக்காலக் குழு ஒன்றும் நியமிக்கப்பட்டது. இதுகுறித்து அந்த நாட்டு நாடாளுமன்றத்தில் பல்வேறு கட்சிகளின் உறுப்பினர்களும் கடுமையாகக் குறைகூறினார்கள்.

இந்த நிலையில் ஐசிசி இலங்கை அணியை இடைநீக்கம் செய்துள்ளது.

“ஐசிசி-யின் முழு நேர உறுப்பினரான இலங்கை கிரிக்கெட் வாரியம் விதிகளை மீறி செயல்படுவதாகத் தெரிகிறது. அதனால், இலங்கை கிரிக்கெட் வாரியத்தை இடைநீக்கம் செய்துள்ளோம். இன்று (நேற்று) நடைபெற்ற கூட்டத்தில் இதைத் தீர்மானித்தோம். இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் விவகாரங்கள் தன்னாட்சி முறையில் நிர்வகிக்கப்பட வேண்டும். மேலும், அரசாங்கத்தின் தலையீடு இல்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டிய தேவை உள்ளது.” என ஐ.சி.சி. தெரிவித்துள்ளது.

இலங்கை கிரிக்கெட் வாரியம் கடந்த 1965இல் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலில் இணை உறுப்பினராக இணைந்தது. 1981இல் முழு உறுப்பினர் அந்தஸ்தைப் பெற்றது. 1975 முதல் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகிறது. 1996இல் ஒருநாள் உலகக் கோப்பை, 2014இல் டி20 உலக கோப்பையையும் இலங்கை அணி வென்றது.

தற்போது நிதி நெருக்கடி, நிர்வாக குளறுபடி காரணமாக இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் செயல்பாடு மோசமாகியுள்ளது. கடந்த ஆண்டு ஆசியக் கோப்பைப் பட்டத்தையும் அந்த அணி வென்றது. ஆனாலும் நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் மோசமாக ஆடி தொடரிலிருந்து வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

logo
Andhimazhai
www.andhimazhai.com