இங்கிலாந்து வீரர்களை ஆட்டமிழக்க செய்த இந்திய பந்துவீச்சாளர்கள்
இங்கிலாந்து வீரர்களை ஆட்டமிழக்க செய்த இந்திய பந்துவீச்சாளர்கள்

இங்கிலாந்து அணியை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி!

இங்கிலாந்து அணியை 100 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் புள்ளிப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது இந்திய அணி.

உலகக் கோப்பை தொடரின் இன்றைப் போட்டியில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதின. லக்னோவில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதனையடுத்து, இந்தியா முதலில் பேட் செய்தது.

தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் சர்மா மற்றும் ஷுப்மன் கில் களமிறங்கினர். ஷுப்மன் கில் 9 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து ஆட வந்த விராட் கோலி 0 ரன்னில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். அதன்பின், ஸ்ரேயாஸ் ஐயர் 4 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து, கேப்டன் ரோஹித் சர்மா - கே.எல்.ராகுல் ஜோடி சேர்ந்தனர்.

சிறப்பாக விளையாடிய ரோஹித் சர்மா அரைசதம் அடித்தார். அவர் 101 பந்துகளில் 87 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கே.எல்.ராகுல் 39 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதன்பின் களமிறங்கிய வீரர்களில் சூர்யகுமார் யாதவைத் தவிர மற்ற வீரர்கள் பெரிதாக ரன் குவிக்கவில்லை. சூர்யகுமார் யாதவ் 47 பந்துகளில் 49 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

இந்திய அணி 50 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 229 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து தரப்பில் டேவிட் வில்லே 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். கிறிஸ் வோக்ஸ் மற்றும் அடில் ரஷீத் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

230 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இங்கிலாந்து அணி களமிறங்கியது. துவக்க ஆட்டக்காரர்களாக ஜானி பேர்ஸ்டோ, டேவில் மாலன் சொற்ப ரன்களிலேயே ஆட்டமிழந்தனர். அடுத்தடுத்த பேட்டிங் செய்ய வந்தவர்களும் ஷமியின் பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தனர். இறுதியில், 34.3 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்களையும் இழந்த இங்கிலாந்து 129 ரன்களை மட்டுமே எடுத்து 100 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்தியத் தரப்பில் முகமது ஷமி 4 விக்கெட்களையும் பும்ரா 3 விக்கெட்களையும் எடுத்து அசத்தினர்.

இன்றைய போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் புள்ளிப் பட்டியலில் இந்திய அணி முதலிடத்தைப் பிடித்து அரையிறுதி வாய்ப்பை உறுதிசெய்துள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com