வெற்றிப் பெற்ற மகிழ்ச்சியில் இந்திய அணி வீரர்கள்
வெற்றிப் பெற்ற மகிழ்ச்சியில் இந்திய அணி வீரர்கள்

தென்னாப்பிரிக்காவை வென்ற இந்தியா!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 243 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்றைய 37வது லீக் ஆட்டத்தில் இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்தியா, பேட்டிங்கை தோ்வு செய்தது. கேப்டன் ரோகித் சா்மா - ஷுப்மன் கில் பாா்ட்னா்ஷிப் முதல் விக்கெட்டுக்கு 62 ரன்கள் சேர்த்தது. அதிரடி காட்டிய ரோகித் 40 ரன்களுக்கு வெளியேறினார். சுப்மன் கில் 23 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார். அடுத்து 3-ஆவது விக்கெட்டுக்கு இணைந்த விராட் கோலி - ஷ்ரேயஸ் ஐயா் ஜோடி அணியின் ஸ்கோரை அதிரடியாக உயர்த்தியது.

134 ரன்கள் சோ்த்த இந்த ஜோடியில், ஸ்ரேயஸ் 77 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினாா். தொடா்ந்து வந்த கே.எல்.ராகுல் 8, அடுத்து வந்த சூா்யகுமாா் யாதவ் 22 ரன்களுக்கு விக்கெட்டை பறிகொடுத்தனர்.

7-ஆவது பேட்டராக வந்த ரவீந்திர ஜடேஜா துணை நிற்க, கோலி நிதானமாக ஆடி ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 49-ஆவது சதத்தை பூர்த்தி செய்தார். ஓவா்கள் முடிவில் அவா் 10 பவுண்டரிகளுடன் 101, ஜடேஜா 15 பந்துகளில் 3 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 29 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

50 ஓவர் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 326 ரன்கள் குவித்தது.

அடுத்து ஆட வந்த தென்னாப்பிரிக்க வீரர்கள் இந்திய பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர். குவின்டன் டி காக் 5, கேப்டன் டெம்பா பவுமா 11, எய்டன் மாா்க்ரம் 9 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர்.

மிடில் ஆா்டரில் ஹென்ரிச் கிளாசென் 1, ராஸி வான் டொ் 13, டேவிட் மில்லா் 11 ரன்களுக்கு வெளியேற, 59 ரன்களுக்கே 6 விக்கெட்டுகளை இழந்தது தென்னாப்பிரிக்கா. இறுதியில், கேசவ் மஹராஜ் 7, ககிசோ ரபாடா 6, லுங்கி இங்கிடி 0 ரன்களுக்கு அடுத்தடுத்து சரிய, அந்த அணியின் இன்னிங்ஸ் 83 ரன்களுக்கு முடிந்தது. இதன் மூலம் இந்திய அணி 243 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்திய பௌலிங்கில் ரவீந்திர ஜடேஜா 5, முகமது ஷமி, குல்தீப் யாதவ் ஆகியோா் தலா 2, முகமது சிராஜ் 1 விக்கெட் சாய்த்தனர்.

logo
Andhimazhai
www.andhimazhai.com