வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் இங்கிலாந்து வீரர்கள்
வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் இங்கிலாந்து வீரர்கள்

முதல் டெஸ்ட்டில் இந்தியா தோல்வி: அவசரப்பட்டுட்டீங்களே அஸ்வின்?

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தியா - இங்கிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ஐதராபாத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி முதலில் ஆடிய இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 246 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. பென் ஸ்டோக்ஸ் சிறப்பாக ஆடி 70 ரன்களை குவித்தார்.

தொடர்ந்து ஆடிய இந்தியா முதல் இன்னிங்சில் 436 ரன்கள் அடித்து அசத்தியது. யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல், ரவீந்திர ஜடேஜா, ஸ்ரீகர் பரத், அக்சர் பட்டேல் ஆகியோர் சிறப்பான ஆட்டைத்தை வெளிப்படுத்தினர்.

அடுத்து இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்தது இங்கிலாந்து. ஒருபுறம் விக்கெட்டுகள் சரிந்தாலும் ஒல்லி போப் நிதானமாக ஆடி சதமடித்தார்.

மூன்றாம் நாள் முடிவில் இங்கிலாந்து 6 விக்கெட்டுகளை இழந்து 316 ரன்களை குவித்தது. போப் 148 ரன்களுடனும், ரெஹான் 16 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இதன்மூலம் இங்கிலாந்து அணி 126 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது.

இந்நிலையில், இன்று நான்காம் நாள் ஆட்டம் நடைபெற்றது. தொடக்கம் முதலே அதிராடியாக ஆடிய இங்கிலாந்து வீரர்கள் அணியின் எண்ணிக்கை 400ஆக உயர்த்தினர். இரட்டை சதமடிப்பார் என எதிர்பார்த்த நிலையில் ஒல்லி போப் 196 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தார்.

இறுதியில், இங்கிலாந்து இரண்டாவது இன்னிங்சில் 420 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. இதன்மூலம் இந்தியா வெற்றிபெற 231 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இந்தியா சார்பில் பும்ரா 4 விக்கெட், அஸ்வின் 3 விக்கெட்டும், ஜடேஜா 2 விக்கெட்டும், அக்சர் பட்டேல் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

இரண்டாவது இன்னிங்ஸை ஆடித்தொடங்கிய இந்திய அணி, 47 ஓவரில் 131 ரன்கள் எடுத்து, 7 விக்கெட்டுகளை இழந்து திணறியது. அப்போது கூட்டணி சேர்ந்த அஸ்வின் (28),  ஸ்ரீகர் பாரத் (28) கூட்டணி 57 ரன்கள் அடித்து சிறப்பாக விளையாடினர்.

இவர்கள் இருவரும் இந்தியாவின் வெற்றிக்கு வழி வகுப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஹார்ட்லி  வீசிய 61ஆவது ஓவரில் போல்ட் ஆனார் பாரத்.

பின்னர், அஸ்வினுடன் பூம்ரா இணைய, மீண்டும் 63ஆவது ஓவரை ஹார்ட்லி வீசவந்தார். அவர் வீசிய முதல் பந்தை எதிர்கொண்ட அஸ்வின் ஏறி ஆட முற்பட்டார். பந்து ஸ்பின்னாகி விக்கெட் கீப்பர் ஃபோக்ஸிடம் சேர, அவர் ஸ்டெம்பிங் செய்தார். இதனால் இந்தியாவின் வெற்றி கைநழுவிபோனது.

இறுதியில், இந்திய அணி 202 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இதன்மூலம், இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 28 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.

மேலும், ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் இங்கிலாந்து முன்னிலையில் உள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com