இந்திய அணி வீரர்கள்
இந்திய அணி வீரர்கள்

இந்தியச் சுழலுக்கு வீழ்ந்தது இங்கிலாந்து!

இங்கிலாந்து அணிக்கு எதிரான 5ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 64 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வந்தது. முதல் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற, அதன்பின் நடைபெற்ற போட்டிகளில் இந்திய அணி அடுத்தடுத்து வெற்றி பெற்று, தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி தர்மசாலாவில் நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி, முதல் இன்னிங்ஸில் 212 ரன்களை மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இந்திய அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகளையும், ரவிச்சந்திரன் அஸ்வின் 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர்.

இதையடுத்து களமிறங்கிய இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, ஷுப்மன் கில் ஆகியோர் அடுத்தடுத்து சதங்களைப் பதிவுசெய்தனர். அதன்பின் 103 ரன்களில் ரோகித் சர்மாவும், 110 ரன்களில் ஷுப்மன் கில்லும் தங்களது விக்கெட்டை இழந்தனர்.

அடுத்து ஆட வந்த யஷஸ்வி ஜெய்ஸ்வால் (57), சர்ஃப்ராஸ் கான் (56), தேவ்தத் படிக்கல் (65) ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதன் மூலம் இந்திய அணி முதல் இன்னிங்சில் 477 ரன்களைச் சேர்த்தது.

இங்கிலாந்து அணி தரப்பில் சோயப் பஷீர் 5 விக்கெட்டுக்ளையும், ஜேம்ஸ் ஆண்டர்சன், டாம் ஹார்ட்லி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர்.

இங்கிலாந்து அணி 259 ரன்கள் பின் தங்கிய நிலையில், இரண்டாவது இன்னிங்சை ஆடத் தொடங்கியது. தொடக்க வீரர்கள் அஸ்வின் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தனர். அதன்பின் இணைந்த ஜோ ரூட் - ஜானி பேர்ஸ்டோவ் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் ஈடுபட்டனர்.

ஜானி பேர்ஸ்டோவ் 39 ரன்கள் எடுத்த நிலையில் தனது விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய கேப்டன் பென் ஸ்டோக்ஸ், பென் ஃபோக்ஸ், டாம் ஹார்ட்லி, சோயப் பஷீர், மார்க் வுட் ஆகியோரும் அடுத்தடுத்து தங்களது விக்கெட்டுகளை இழந்து நடையைக் கட்டினர். ஆனாலும், மறுபக்கம் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஜோ ரூட் 84 ரன்கள் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார். இதனால் இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் 195 ரன்களிலேயே அல் அவுட்டானது.

இந்திய அணி தரப்பில் ரவிச்சந்திரன் அஸ்வின் 5 விக்கெட்டுகளையும், ஜஸ்ப்ரித் பும்ரா, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

இதன்மூலம் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 64 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்ள்ளது. இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 4-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியுள்ளது.

இந்த டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்தின் வேகப்பந்து வீச்சாளரான ஆண்டர்சன் 700 விக்கெட்கள் வீழத்தி சாதனைப்படைத்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com