ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டிகளில், ஒரே நாளில் 6 பதக்கங்களை இந்தியா வென்றுள்ளது.
இந்தப் போட்டிகளில், 1 தங்கம், 3 வெள்ளி, 2 வெண்கலம் என இந்திய வீரர்கள் பதக்கங்களைக் குவித்துள்ளனர்.
பாரா தடகளப் போட்டியில் பெண்களுக்கான பிரிவில் எஃப்.57 குண்டு எறிதல் போட்டியில் பங்கேற்ற ஷர்மிளா தன்கர், தங்கப் பதக்கம் வென்றார். பாரா தடகளத்தில் இந்தியா தங்கப் பதக்கம் வெல்வது இதுவே முதல் முறையாகும்.
இதே போட்டியில் பங்கேற்ற இந்தியாவைச் சேர்ந்த ஷில்பா கே. ஷைலா வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.
ஒரே போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த இருவர் இரண்டு பதக்கங்களைப் பெற்றுள்ளனர்.
ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் போட்டியில் பங்கேற்ற சர்வேஷ் குஷாரே வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.
பெண்களுக்கான பளு தூக்குதல் போட்டியின் 53 கிலோ பிரிவில், ஞானேஸ்வரி யாதவ் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.
ஆண்களுக்கான பளு தூக்குதல் போட்டியின் 79 கிலோ பிரிவில், வல்லூரி அஜய பாபு வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.
மேலும், பெண்களுக்கான பளு தூக்குதல் போட்டியின் 58 கிலோ பிரிவில், பிந்தியாராணி தேவி வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.
இந்த வெற்றிகளால் காமன்வெல்த் போட்டிகளின் பதக்கப் பட்டியலில், இந்தியா 8ஆம் இடம் பிடித்துள்ளது.
ஆஸ்திரேலியா 26 தங்கம், 13 வெள்ளி, 20 வெண்கலம் என மொத்தம் 59 பதக்கங்களுடன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.