அடடே... தூங்க வைக்க ஆலோசகரா?
பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ளும் இந்திய வீரர்களுக்குத் தூக்கம் தொடர்பான ஆலோசனை வழங்குவதற்கு மருத்துவர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்க இன்னும் 37 நாட்களே உள்ளன. ஜூலை 26ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 11ஆம் தேதி முடிவடையும் ஒலிம்பிக் போட்டியில், இருநூறு நாடுகளைச் சேர்ந்த 10,500 வீரர்கள் கலந்து கொள்கின்றனர்.
இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வீரர்களுக்கு மிகப்பெரிய சிக்கலாக இருக்கப்போவது வெப்பம்தான் என்கிறனர் பலரும்.
பொதுவாக ஐரோப்பிய நாடுகளில் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் சூரியன் அதிகாலை 4 மணிக்கு உதித்து, இரவு 11 மணிக்குத்தான் மறையும். இதற்குப் பழக்கப்படாத இந்திய வீரர்கள் தூக்கத்தால் அவதிப்படுவார்கள் என்பதால், இந்திய ஒலிம்பிக் சங்கம் தூக்க நல ஆலோசகரான (sleeping advisor) மருத்துவர் மோனிகா சர்மாவை நியமித்துள்ளது.
இவர் இந்திய வீரர்களுடன் பாரிஸூக்கு செல்வார் என்றும், அவர்களுக்கு தூக்கம் தொடர்பான ஆலோசனைகளையும் வழிகாட்டுதல்களையும் வழங்குவார் என்றும் கூறப்படுகிறது.
”ஒலிம்பிக் கிராமம் மிகவும் மனம் அழுத்தம் கொண்ட பகுதி; அங்கு தூங்குவதற்கு ஏற்ற சூழல் இல்லை. இதனால் வீரர்களுக்குத் தேவையான ஆலோசனைகளை வழங்குவோம்” என்கிறார் மருத்துவர் மோனிகா சர்மா.
சர்வதேச விளையாட்டு போட்டி வரலாற்றில், தூக்கம் தொடர்பான ஆலோசகரை இந்தியா நியமித்திருப்பது இதுவே முதல்முறையாகும்.