நாங்களா பொறுப்பு...? வினேஷ் போகத் மீது பழியைப் போட்ட பி.டி. உஷா!
பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு அவர்தான் காரணம். அவர் எடையை சரிவர நிர்வகித்திருக்க வேண்டும். இதற்கு மருத்துவக் குழுவினர் பொறுப்பாக மாட்டார்கள் என்று இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் பி.டி. உஷா தெரிவித்துள்ளார்.
பாரிஸ் ஒலிம்பிக்கில் 50 கிலோ மகளிருக்கான மல்யுத்தப் போட்டியில் தங்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்ட இந்திய வீராங்கனை வினேஷ் போகத், 100 கிராம் எடை கூடுதலாக இருந்ததால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனால் அவருக்கு எந்த பதக்கமும் கிடைக்கவில்லை.
வினேஷ் போகத்தின் தகுதி இழப்பிற்கு பின்னால் சதி இருக்கலாம் என்று பலரும் விமர்சித்து உள்ளனர். தகுதி நீக்கத்தை எதிர்த்து வினேஷ் போகத் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மீது விளையாட்டுப் போட்டிகளுக்கான தீர்ப்பாயம் நாளை தீர்ப்பு அளிக்க இருக்கிறது.
இந்த நிலையில், வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டது குறித்து இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் பிடி உஷா விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:
“மல்யுத்தம், பளுதூக்குதல், குத்துச்சண்டை மற்றும் ஜுடோ போன்ற விளையாட்டுகளில் போட்டியாளர்களின் எடை விவகாரத்தில் அந்தந்த போட்டியாளரும், பயிற்சியாளர்களும் தான் பொறுப்பு. இதற்கு இந்திய ஒலிம்பிக் சங்கம் நியமித்த மருத்துவக் குழு பொறுப்பாகாது. ஒவ்வொரு விளையாட்டுகளிலும் பங்கேற்கும் வீரர், வீராங்கனைகளுக்கு உதவுவதற்கு என்று தனிக்குழு இருப்பார்கள். அவர்கள் பல ஆண்டுகளாக இணைந்து செயல்படுவார்கள். ஆனால், இந்திய ஒலிம்பிக் குழு, ஒலிம்பிக் தொடங்குவதற்கு இரு மாதங்களுக்கு முன்புதான், வீரர்களுடன் தொடர்பில் இருப்பார்கள். அதுவும், போட்டியின்போதோ அல்லது போட்டிக்குப் பிறகோ, வீரருக்கு ஏற்படும் காயம் உள்ளிட்ட பிரச்னைகளை கவனித்துக் கொள்வார்கள்.
மேலும், ஊட்டச்சத்து நிபுணர், பிஸியோதெரபிஸ்ட் இல்லாத வீரர்களுக்கு, அந்தப் பணிகளையும் கூடுதலாக இந்த மருத்துவக் குழு செய்யும். எனவே, வினேஷ் போகத் விவகாரத்தில் தின்ஷா பர்திவாலா தலைமையிலான மருத்துவக் குழுவை குறை சொல்வது நியாயமல்ல.” எனக் கூறினார்.
வினேஷ் போகத்துக்கு சாதகமாக தீர்ப்பு வரும் என ரசிகர்கள் எதிர்பார்த்து உள்ள நிலையில், இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவரான பிடி உஷா இப்படி விளக்கம் அளித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.