ஜெய்ஸ்வால் மீண்டும் இரட்டை சதம்: வலுவான நிலையில் இந்தியா!

ஜெய்ஸ்வால் மீண்டும் இரட்டை சதம்: வலுவான நிலையில் இந்தியா!

இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வீரர் ஜெய்ஸ்வால் இரட்டை சதம் அடித்து அசத்தியுள்ளார்.

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 15 ஆம் தேதி ராஜ்கோட்டில் தொடங்கியது. இந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 445 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அணியில் அதிகபட்சமாக கேப்டன் ரோகித் சர்மா 131 ரன்களும், ரவீந்திர ஜடேஜா 112 ரன்களும் எடுத்தனர்.

இதனையடுத்து, முதல் இன்னிங்ஸில் விளையாடிய இங்கிலாந்து 319 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய பென் டக்கெட் அதிகபட்சமாக 153 ரன்கள் குவித்தார். இந்தியா தரப்பில் சிராஜ் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

126 ரன்கள் முன்னிலையுடன் இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கியது. முதல் இன்னிங்ஸில் சதம் விளாசி கேப்டன் ரோகித் சர்மா 19 ரன்களில் ஜோ ரூட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

இதனையடுத்து, ஜெய்ஸ்வால் - ஷுப்மன் கில் ஜோடி சேர்ந்தனர். இந்த இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணிக்கு ரன்களை சேர்த்தது. அதிரடியாக விளையாடிய ஜெய்ஸ்வால் சதம் விளாசியும், ஷுப்மன் கில் அரைசதம் எடுத்தும் அசத்தினர்.

தசைப்பிடிப்பின் காரணமாக 104 ரன்களில் (9 பவுண்டரிகள், 5 சிக்ஸர்கள்) ஜெய்ஸ்வால் ரிட்டையர்டு ஹர்ட் ஆனார். அதன்பின் வந்த ரஜத் படிதார் ரன் ஏதும் எடுக்காமல் பெவிலியன் திரும்பினார். மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 2 விக்கெட்டுகளை இழந்து 196 ரன்கள் எடுத்தது. இன்று ஷுப்மன் கில் 65 ரன்களுடனும், குல்தீப் யாதவ் 3 ரன்களுடனும் ஆட்டத்தை துவங்கினர்.

சிறப்பாக, ஆடி வந்த சுப்மன் கில் 94 ரன்களில் ஆட்டமிழந்து சதத்தைத் தவறவிட்டார். மறுமுனையில் நிதானமாக ஆடிய குல்தீப் 24 ரன்களில் ஆட்டமிழந்தார். தசைப்பிடிப்பிலிருந்து மீண்ட ஜெய்ஸ்வால் பேட்டிங் செய்தார். பொறுப்பாக ஆடிய அவர், 231 பந்துகளில் தன் இரண்டாவது சர்வதேச இரட்டை சதத்தைப் பதிவு செய்து அசத்தியுள்ளார்.

இங்கிலாந்துடன் மோதிய இரண்டாவது டெஸ்டில் தன் முதல் இரட்டை சதத்தைப் பதிவு செய்தவர் அடுத்த போட்டியில் இரண்டாவது இரட்டை சதத்தை பதிவு செய்து ஆச்சரியப்படுத்தியுள்ளார். மறுமுனையில் சர்ஃபராஸ் கான் தன் இரண்டாவது அரைசதத்தைப் பதிவு செய்தார்.

இந்நிலையில், இந்திய அணி 556 ரன்கள் முன்னிலையில் இருந்தபோது டிக்ளர் செய்தது. இதனால், இங்கிலாந்து அணிக்கு 557 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com