சாதனை படைத்த ரிஷப் பந்த்... ரூ. 27 கோடிக்கு ஏலம் எடுத்த லக்னோ!

Shreyas Iyer and Rishabh Pant
ஸ்ரேயாஸ் ஐயர் - ரிஷப் பந்த்
Published on

சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டா நகரில் ஐபிஎல் ஏலம் நடைபெற்று வருகிறது. இதில், ரிஷப் பந்த்தை ரூ. 27 கோடிக்கு  லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும், ஸ்ரேயாஸ் ஐயரை ரூ. 26.75 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் அணி ஏலம் எடுத்துள்ளது.

பத்து அணிகள் பங்கேற்கும் 18ஆவது ஐபிஎல் டி20 கிரிக்கெட் அடுத்த ஆண்டு மார்ச் 14ஆம் தேதி தொடங்கி மே 25ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதையொட்டி வீரர்கள் தக்கவைப்பு, வீரர்கள் விடுவிப்பு உள்ளிட்டவை நிறைவடைந்துள்ளன.

இந்நிலையில், ஐபிஎல் கிரிக்கெட் வீரர்கள் மெகா ஏலம் சவுதி அரேபியாவில் இன்றும் நாளையும் நடைபெறுகிறது. இந்த ஏலப்பட்டியலில் மொத்தம் 577 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். ஐபிஎல் வீரர்கள் ஏலம் இந்திய நேரப்படி இன்று மாலை 3.30 மணிக்கு தொடங்கியது.

இந்த மெகா ஏலாத்தில் இங்கிலாந்து வீரர் ஜோஷ் பட்லரை ரூ.15.75 கோடிக்கு குஜராத் அணி ஏலம் எடுத்துள்ளது.

இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக கருதப்படும் ஸ்ரேயாஸ் ஐயரை ரூ.26.75 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் அணி ஏலம் எடுத்த நிலையில், அடுத்த சில நிமிடங்களில், ரிஷப் பந்த்தை ரூ. 27 கோடிக்கு  லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி ஏலம் எடுத்தது. இது ஐபிஎல் வரலாற்றில் மிக அதிக தொகையாகும்.

தென் ஆப்பிரிக்க வீரர் ரபடாவை ரூ.10.75 கோடிக்கு குஜராத் அணியும் அர்ஷிதீப் சிங்கை ரூ.18 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் அணியும் ஏலம் எடுத்துள்ளது.

ஆர்.டி.எம். கார்டு மூலம் பஞ்சாப் அணி அர்ஷிதீப் சிங்கை ரூ .18 கோடிக்கு மீண்டும் ஏலத்தில் வாங்கி உள்ளது

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ஐபிஎல் மெகா ஏலம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

logo
Andhimazhai
www.andhimazhai.com