பத்து மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் மனு பாக்கர் - சரப்ஜோத் ஜோடி வெண்கல பதக்கத்தை வென்று அசத்தியுள்ளனர்.
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் 33ஆவது ஒலிம்பிக் தொடர் கடந்த ஜூலை 27ஆம் தேதி தொடங்கியது. இப்போட்டிகள் வரும் ஆகஸ்ட் 11ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன. இப்போட்டியில் 206 நாடுகளைச் சேர்ந்த 10,714 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். பாரீஸ் ஒலிம்பிக்கில் 117 பேர் கொண்ட இந்திய அணி 16 விளையாட்டுகளில் பங்கேற்கிறது.
2ஆம் நாளான ஜூலை 28 அன்று துப்பாக்கிச்சுடுதல் மகளிர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் போட்டியில் இந்திய நட்சத்திர வீராங்கனை மனு பாக்கர் வெண்கலம் வென்று இந்தியாவின் பதக்க கணக்கை தொடங்கி வைத்தார்.
இந்நிலையில், 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவில் நேற்று (ஜூலை 29) நடைபெற்ற தகுதிச் சுற்றில் இந்தியாவின் மனு பாக்கர் - சரோப்ஜித் சிங் இணை அசத்தலாக விளையாடி, வெண்கலப் பதக்கத்துக்கான போட்டிக்கு தகுதி பெற்றது.
இதனிடையே, இன்று மதியம், வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் தென் கொரியாவின் வோன்ஹோ லீ - யே லின் ஓ இணையுடன் மோதியது.
இதில் அபாரமாக செயல்பட்ட இந்தியாவின் மனு பாக்கர் மற்றும் சரோப்ஜித் சிங் இணை 16- 10 என்ற புள்ளிகள் அடிப்படையில் வெண்கலப் பதக்கத்தை வென்றது.
ஏற்கனவே தனி நபர் பிரிவில் வெண்கலம் வென்ற மனு பாக்கர், கலப்பு இரட்டையர் பிரிவிலும் இந்தியாவுக்கு வெண்கல பதக்கத்தை வென்றுள்ளார். இதன் மூலம் ஒரே ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கங்கள் வென்ற ஒரே இந்திய வீராங்கனை என்ற வரலாற்றை மனு பாக்கர் படைத்திருக்கிறார்.