”கேல் ரத்னா விருது விஷயத்தில் எனது தரப்பில் தவறு நடந்துள்ளது” என மனு பாகர் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு சார்பில் விளையாட்டின் உயரிய 'கேல் ரத்னா' விருது வழங்கப்படுகிறது. 2024ஆம் ஆண்டுக்கான பரிந்துரை பட்டியலில் பாரிஸ் ஒலிம்பிக்கில் வெண்கலம் பெற்றுத்தந்த இந்திய ஹாக்கி அணி கேப்டன் ஹர்மன்பிரீத் சிங், உயரம் தாண்டுதல் வீர் பிரவீன் குமார் (பாராலிம்பிக்கில் தங்கம்) பெயர் இடம் பெற்றுள்ளது. அர்ஜுனா விருதுக்கு 30 பேர் பரிந்துரைக்கப்பட்டனர். இதுகுறித்த இறுதி அறிவிப்பு முறைப்படி வெளியாகவில்லை.
இதனிடையே பாரிஸ் ஒலிம்பிக்கில் 2 பதக்கம் வென்று வரலாறு படைத்த துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மனு பாகர் பெயர், கேல்ரத்னா பட்டியலில் இடம் பெறவில்லை என சர்ச்சை கிளம்பியது. 'மனு பாகர் விண்ணப்பிக்கவில்லை' என மத்திய விளையாட்டு அமைச்சகம் கூறியது.
மனுபாகர் தந்தை ராம் கிஷன் கூறுகையில்,''மனு பாகரை துப்பாக்கிசுடுதல் வீராங்கனையாக உருவாக்கியதற்கு வருத்தப்படுகிறேன். இவரை கிரிக்கெட் வீராங்கனையாக கொண்டு வந்திருக்க வேண்டும்'' என்றார்.
இந்த நிலையில், அரியானைச் சேர்ந்த மனு பாகர் இந்த பிரச்னையில் விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பதிவில், நாட்டிற்காக விளையாடி பெருமை சேர்ப்பது மட்டும் தான் எனது வேலை. இதற்காக கிடைக்கும் விருதுகளும், அங்கீகாரமும் தொடர்ந்து சிறப்பாக செயல்பட எனக்கு துாண்டுகோலாக இருக்கும். ஆனால் விருதுகளை பெறுவது மட்டும் எனது இலக்கு அல்ல.
உயரிய கேல் ரத்னா விருதுக்கு பரிந்துரை செய்யப்படுவதில், எனது தரப்பில் ஏதோ தவறு நடந்திருக்கலாம். விரைவில் இது சரி செய்யப்படும். மற்றபடி விருதுகளை பொருட்படுத்தாமல், தேசத்திற்காக தொடர்ந்து பதக்கங்கள் வெல்ல முயற்சிப்பேன். இவ்விஷயத்தில் தவறாக எதுவும் தெரிவிக்க வேண்டாம் என அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு பதிவிட்டு சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.