இரட்டை சதம் அடித்த மேக்ஸ்வெல்
இரட்டை சதம் அடித்த மேக்ஸ்வெல்

யோவ் மேக்ஸ்வெல்.. மனுஷனாய்யா நீ? ஒற்றை ஆளாக அணியை மீட்ட சூப்பர்மேன்!

தற்போது நடந்துவரும் ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் ஆட்டங்களில் மிகச்சிறந்த ஆட்டங்களில் ஒன்று நடந்தேறி இருக்கிறது. தோல்வியில் பிடியிலிருந்த ஆஸ்திரேலிய அணியை ஒற்றை ஆளாக ஆடி மூன்று விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வெல்ல உதவி செய்திருக்கிறார் மேக்ஸ்வெல்.

அதுவும் ஆடிக்கொண்டிருக்கையில் பாதியில் காலை அசைக்கமுடியாமல் இழுத்துக்கொள்கிறது. ஓடி ரன் எதுவும் எடுக்கமுடியவில்லை. இலக்கோ 291. இதுவரை ஆஸ்திரேலியா உலகக்கோப்பை ஆட்டங்களில் துரத்தி எடுத்தே இராத இலக்கு. சுத்தமாக யாருக்கும் நம்பிக்கை இல்லாத நிலையில் மேக்ஸ்வெல் என்கிற மாஜிக்மேன், நின்ற இடத்தில் நின்றவாறே பவுண்டரிகளும் சிக்ஸ்களும் ம்ட்டுமே அடித்து ஜெயித்துக்கொடுத்திருக்கிறார். இதுபோன்றதொரு நிகழ்வு இதற்கு முன்னும் நடந்தது இல்லை. இனிமேல் நடக்கப்போவதும் இல்லை. இன்கிரடிபிள்.. இன்கிரடிபிள் என்று சொல்லிச் சொல்லி வரணனையாளர்கள் ஓய்ந்துபோய்விட்டார்கள். ஜிம்பாப்வேக்கு எதிராக கபில்தேவ் 175 அடித்ததே பெரும் சாதனையாகப் நினைத்தோம். ஆனால் அந்த ஆட்டம் காணொலியாகப் பதிவு செய்யப்படவில்லை. இது அதையும் தாண்டி மிகப்பெரிய கிரிக்கெட் நிகழ்வாகப் பதிவாகி இருக்கிறது.

ஆஸ்திரேலியா கேப்டன் பேட் கம்மின்ஸ்தான் ஏழாவது ஆட்டக்காரராக இறங்கினார். அப்போது ஸ்கோர் 91 ரன்கள் மட்டுமே. ஒரே பேட்ஸ்மேனாக எதிர்முனையில் எஞ்சி இருந்தவர் மேக்ஸ்வெல் மட்டுமே. எனவே கம்மின்ஸ் பந்துகளை தடுத்துமட்டும் ஆடினார். அவர் அடித்து ஆடி அவுட் ஆகிவிடாமல் இருக்க, இன்னொரு முனையில் மேக்ஸ்வெல்.. மேட் மேக்ஸ்வெல் ஆக ஆடி 201 ரன்களை எடுத்து 291 என்கிற இலக்கை எடுக்க உதவி செய்தார். ஆட்டத்தின் இடையே அவர் ரன் ஓடி தடுமாறி விழுந்ததும் வலியால் துடித்ததும் இதயத்துடிப்பை எகிறச் செய்தன. ஒரு கட்டத்தில் மே்க்ஸ்வெல் ஆடவே முடியாது என நினைத்து அடுத்து களம் இறங்கவேண்டிய ஆடம் ஜாம்பாவை இறக்க நினைத்தார்கள். ஜாம்பாவும் படி இறங்கி வந்தார். ஆனால் மேக்ஸ்வெல் நின்றார்... நிலைத்து நின்றார். ஆப்கானிஸ்தான் பந்துவீச்சை பொளந்தார். ஸ்டேண்ட் அண்ட் டெலிவர் என்பார்கள் ஆங்கிலத்தில். மேக்ஸ்வெல் கடைசி பத்து ஓவர்களில் அதை மட்டுமே செய்தார். 128 பந்துகளில் 201 என்கிற ரன்கள் உலகக்கோப்பை வரலாற்றில் மூன்றாவது பெரிய ஸ்கோர் ஆகும். அத்துடன் ஆஸ்திரேலிய வீரர் ஒருவர் ஒருநாள் போட்டிகளில் 200 ரன்கள் அடிப்பது இதுவே முதல் முறை. அதுமட்டும் அல்ல. இலக்கைத்துரத்துகையில் இந்த இரட்டை சதம் குவித்திருப்பது நம்பமுடியாத சாதனையே.

ஆப்கானிஸ்தான் அணி இந்த உலகக்கோப்பையில் சிறப்பாக ஆடி பெரிய அணிகளைச் சாய்த்துவிட்டு நம்பிக்கையுடன் களமிறங்கியது. 291 ரன்களை ஆஸ்திரேலியாவுக்கு எதிராகக் குவித்தது. அந்த அணியின் வீரர் இம்ப்ராஹிம் சட்ரான் 129 ரன்களைக் குவித்தார். உலகக்கோப்பையில் ஆப்கான் சார்பாக அடிக்கப்பட்ட முதல் சதம் இதுதான்.

மிகுந்த நம்பிக்கையுடன் பந்துவீசப்புகுந்தவர்களுக்கு ஆஸ்திரேலிய அணி வீரர்கள் முட்டாள்தனமாக ஆடி வரிசையாக அவுட் ஆகி உற்சாகம் அளித்தார்கள். 39 ரன்களில் மேக்ஸ்வெல் கொடுத்த கேட்சை தவறவிட்டார்கள். அதில் பிடித்தது சனி. ஏழு விக்கெட் சரிந்த நிலையில் பிறகு நடந்தது கிரிக்கெட் ஒரு எதிர்பாரா தருணங்களால் நிறைந்த ஆட்டம் என்பதற்கான எடுத்துக்காட்டு.

logo
Andhimazhai
www.andhimazhai.com