முதல் வெள்ளிப் பதக்கம்... நீரஜ் சோப்ரா அசத்தல்!
பாரிஸ் ஒலிம்பிக் ஈட்டி எறிதல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று, தொடர்ச்சியாக அடுத்தடுத்த இரண்டு ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்ற இந்திய தடகள வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை படைத்துள்ளார் நீரஜ் சோப்ரா.
33வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடந்து வருகிறது. 206 நாட்டு வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள இந்த விளையாட்டு திருவிழா இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இதில் ஆடவர் ஈட்டி எறிதல் இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது.
இதில், பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம் 92.97 மீட்டர் தூரத்திற்கு வீசி சாதனை படைத்ததோடு, தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். அவரை தொடர்ந்து இந்திய வீரர் நீரஜ் சோப்ரா, 89.45 தூரத்திற்கு வீசி 2ஆவது இடத்தைப் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றார். கிரெனெடா நாட்டைச் சேர்ந்த ஆண்டர்சன் பீட்டர்ஸ் 88.54 தூரத்திற்கு வீசி 3ஆவது இடத்தைப் பிடித்து வெண்கலப் பதக்கம் வென்றார்.
2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம், 2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் வெள்ளி என இந்திய தடகள விளையாட்டில் யாருமே இதுவரை செய்யாத மகத்தான சாதனையாக, அடுத்தடுத்த இரண்டு ஒலிம்பிக் போட்டிகளில் தொடர்ச்சியாக பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார் நீரஜ் சோப்ரா.
நீரஜின் வெள்ளிப் பதக்கம் மூலம் பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியா வென்ற பதக்கங்களின் எண்ணிக்கை 5 ஆக கூடியுள்ளது.
அரியாணாவின் பானிப்பட்டில் ஏழை விவசாயக் குடும்பத்தில் பிறந்த நீரஜ், அங்குள்ள பிவிஎன் பள்ளியிலும், சண்டிகரிலுள்ள தயானந்த் ஆங்கிலோ - வேதிக் கல்லூரியில் பட்டப்படிப்பும் படித்தார். இளம் வயதிலேயே ஈட்டி எறிதலில் ஆர்வம் கொண்ட நீரஜ், தன்னை மெருகேற்றிக் கொண்டு தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் ஜொலித்தார். இதன்மூலம் இந்திய ராணுவத்தில் அவருக்கு சுபேதார் பணியிடம் கிடைத்தது.