
மும்பை இந்தியன் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா, பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு இனி விளையாடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. பஞ்சாப் அணியின் முக்கிய பந்துவீச்சாளரான அர்ஷ்தீப் சிங்கை இவருக்குப் பதிலாக மும்பை இந்தியன் அணிக்கு அந்த அணி நிர்வாகம் வழங்கி உள்ளது.
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு தலைவராக இருந்த ஹர்திக் பாண்டியாவை முமபை இந்தியன் அணி மெனக்கெட்டு வாங்கி தங்கள் அணிக்கு 2024-இல் கொண்டுவந்தது. அத்துடன் ரோஹித் சர்மாவிடம் இருந்த கேப்டன் பதவியைப் பிடுங்கி ஹர்திக்கிடம் அளித்தது. ஆனால் கடந்த மூன்று ஆண்டுகளில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு படுதோல்விகள்தான் கிடைத்தன.
அணிக்குள் ஹர்திக் பாண்டியாவுக்கு ஒத்துழைப்பு இல்லை. ரோஹித்திடம் இருந்து காப்டன் பதவியைப் பிடுங்கியதில் யாருக்கும் விருப்பம் இல்லை என சொல்லப்பட்டது . மும்பை இந்தியன் அணியின் தீவிர ரசிகர்களும் பாண்டியா மீது கொலை வெறியில் இருந்தனர். அவரை ஆட்ட நேரத்தில் ரசிகர்கள் கிண்டல் செய்ததும் நடந்தது. இதனால் பாண்டியாவின் ஆட்டத் திறனும் பாதிக்கப்பட்டது. 2026 -இல் 9-வது இடத்தையே மும்பை இந்தியன்ஸ் பிடித்தது.
எனவே ஹர்திக் பாண்டியாவை எப்படியாவது கழற்றிவிட த் தீர்மானித்த மும்பை இந்தியன் அணி விளையாட்டுவீரர்களை மாற்றிக்கொள்ளும் உத்திமூலம் இவரை வெளியே அனுப்பத் தீர்மானித்து பல அணிகளிடம் பேசியது. சி எஸ்கே அணிக்குக் கூட இவரை வாங்கலாம் என திட்டமிருந்தது. தற்போது பஞ்சாப் கிங்ஸ் அணி ஹர்திக் பாண்டியாவை எடுத்துக்கொண்டு அர்ஷ்தீப் சிங்கை மும்பையிடம் கொடுத்துள்ளது. ஹர்திக் 18 கோடிக்கும், அர்ஷ்தீப் 18 கோடியுமாக விலை தீர்மானிக்கப்பட்டுள்ளனர்.
பஞ்சாப் கிங்ஸ் அணியில் ஏற்கெனவே ஷ்ரேயாஸ் அய்யர் கேப்டனாக இருக்கிறார். அங்கு ஒரு வீரர் என்ற நிலையிலேயே ஹர்திக் விளையாடுவார். மும்பை இந்தியன் அணியில் ஏற்கெனவே பும்ரா இருக்கிறார். அவருடன் இணைந்து அர்ஷ்தீப்பும் பந்து வீசினால் எதிரணிக்கு கதிகலங்கும்.
“ஹர்திக் எங்கள் அணியில் மிக முக்கியமானவராக இருந்தார். நாங்கள் அவரை மதிக்கிறோம். அவருக்கு எதிர்காலத்தில் மேலும் சிறப்பாக செயல்பட வாழ்த்துகிறோம்’’ என்று மும்பை அணியின் உரிமையாளர் ஆகாஷ் அம்பானி கூறி உள்ளார்.